தொகுதியில் உள்ள பிரச்சனைகளை திமுக தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தொகுத நிர்வாகிகளிடம் திமுக ஒருங்கிணைப்பு குழு உறுதி அளித்துள்ளது.
தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. திமுக சார்பாக ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகளிடம் வேட்பாளர் மற்றும் தொகுதி நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒருங்கிணைப்புக் குழுவினர் சந்தித்துப் பேசினர். குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வாக்குகள் குறைந்தால்- திமுக எச்சரிக்கை
தற்போதைய கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக்கட்சியினரின் பலம், திமுகவில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகளை நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தனர். பிரச்சனைக்குரிய பகுதிகளில் நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டன. சிலவற்றில் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும், சிலவற்றில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடவடிக்கை இருக்கும் எனவும் உறுதியளித்தனர்.
சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தலில் வாக்குகள் குறைந்தால் பொறுப்பு அமைச்சர் தொடங்கி- ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழுவினர் எச்சரித்தனர். இறுதியாக இத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல் எனவும், இத்தேர்தலில் வெற்றி என்பது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும் எனவும் திரு. உதயநிதி உரையாற்றினார்.
இதையும் படியுங்கள்