கொரோனா தடுப்பூசி விண்ணப்பத்தை திரும்ப பெற்றது பைசர் நிறுவனம்.. கூடுதல் தரவுகளை கேட்டதால் முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Feb 5, 2021, 2:06 PM IST
Highlights

அதாவது ஒரு தடுப்பூசி மூன்று கட்ட சோதனையை நிறைவு செய்த பிறகே,  குறிப்பாக இறுதிக்கட்ட பரிசோதனையில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்த பிறகே அத்தடுப்பூசி மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தனது கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த பைசர் நிறுவனம் தனது விண்ணப்பத்தை திடீரென திரும்பப் பெற்றுள்ளது. இது மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து எடுத்த நடவடிக்கைகள் மூலம் மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன.  மற்ற நாடுகளை விட இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம்  கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ்க்கு எதிராக முன்னணி நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் அவசர கால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு, தற்போது அது முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இதனால், எப்படியும் கொரோனாவை ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் எந்த நாட்டு தடுப்பூசிகளையும் விட இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் விலை குறைந்ததாக உள்ளது, இதனால்  ஏழை மற்றும் நடுத்தர நாடுகள் இந்தியாவின் தடுப்பூசிகளை வாங்கவே ஆர்வம் காட்டி வருகின்றன. மற்ற எந்த நாடுகளையும் காட்டிலும் இந்தியாவே தடுப்பூசி அதிகம் செலுத்திய நாடக  நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இந்தியாவில் தனது கொரோனா தடுப்பு மருந்தை அவசர காலத்திற்கு பயன்படுத்த அனுமதி கோரி ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. தற்போது அந்த விண்ணப்பத்தை திடீரென அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. 

அதாவது ஒரு தடுப்பூசி மூன்று கட்ட சோதனையை நிறைவு செய்த பிறகே,  குறிப்பாக இறுதிக்கட்ட பரிசோதனையில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்த பிறகே அத்தடுப்பூசி மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் செயல் திறன் தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கேட்டுள்ளது, எனவே அந்த தகவல்களை இணைத்து மீண்டும் விண்ணப்பிக்க பைசர் நிறுவனம் முடிவு செய்துள்ளதால், ஏற்கனவே  செய்த விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிவித்துள்ள பைசர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூடுதல் தகவல்களை இணைத்து மீண்டும் விண்ணப்பிக்கப்படும் என கூறியுள்ளார். 

 

click me!