5 மேயர், 2 துணை மேயர், 15 நகராட்சித் தலைவர்.. காங்கிரஸ் கட்சியின் டிமாண்ட்.. ஸ்டாலின் முடிவு என்ன.?

By Raghupati RFirst Published Feb 26, 2022, 10:59 AM IST
Highlights

திமுக கூட்டணியில் மேயர், துணை மேயர், நகராட்சி சேர்மன் பதவிகளை பெறும் வகையில் காங்கிரஸ் கட்சி பட்டியலை தயார் செய்திருக்கிறது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில், அடுத்ததாக மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி சேர்மன், துணை சேர்மன் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் தேர்தல் மீது அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் 21 மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளை முழுமையாக கைப்பற்றுகின்றன.

இதேபோல நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான சேர்மன், துணை சேர்மன் பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மேயர், சேர்மன் பதவிகளைப் பெறும் வகையில் காய்களை நகர்த்தி வருகின்றன.

கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 21 மாநகராட்சிகளில் 73 வார்டுகள் உட்பட மொத்தம் 592 வார்டுகளில் வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 16 வார்டுகளில் போட்டியிட்டு, 13 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதேபோல நகராட்சிகளில் 151 வார்டுகள், பேரூராட்சிகளில் 368 வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வார்டுகளில் வெற்றி பெற்ற கட்சியாகவும் காங்கிரஸ் கட்சியே உள்ளது. இதற்கிடையே மேயர், துணை மேயர், நகராட்சி சேர்மன், துணை சேர்மன் பதவிகளைக் கேட்டு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பட்டியலை அளித்தார்.

தற்போது காங்கிரஸ் கட்சியும் பட்டியலை தயார் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த காலத்தில் 6 மாநகராட்சிகள் மட்டுமே இருந்தபோதே 1996-இல் தமாகாவுக்கும் 2006-இல் காங்கிரஸ் கட்சிக்கும் 2 மேயர் பதவிகளை திமுக வழங்கியது. தற்போது 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 5 மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. என்றாலும் 3 மாநகராட்சிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது.

நாகர்கோவில், கடலூர், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகள் காங்கிரஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதேபோல சென்னை, திருச்சி, சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 2 துணை மேயர் பதவிகளையும் கேட்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. தவிர 15-க்கு மேற்பட்ட நகராட்சித் தலைவர்கள் பதவிகளையும் காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது. 

இதற்கிடையே இந்தப் பதவிகளைப் பெறுவது தொடர்பாக தமிழக நகர்ப்புற தேர்தல் மேலிடப் பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் ஆலோசித்தனர். இன்றோ அல்லது ஓரிரு நாட்களிலோ பட்டியலுடன் மு.க. ஸ்டாலினை சந்திக்கவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

click me!