முதல்வர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமையே அறிவிக்கும்.. எடப்பாடியார் தலையில் இடி இறக்கிய செல்லூர் ராஜூ.

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2020, 2:26 PM IST
Highlights

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவை பொறுத்தவரையில் அது அகில இந்திய கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சி தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்.

அதிமுகவின் கூட்டணியில் பாரதிய ஜனதா என்ற தேசிய கட்சி இருப்பதால், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சியின் தலைவர் தான்  அறிவிப்பார்கள் என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுக ஏற்கனவே தனது கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் செல்லூர்  ராஜீவின் கருத்து அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான காய்நகர்த்தல்களும், வியூகங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன்தான் வரும் சட்டமன்ற தேர்தலையும் எதிர் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக எடப்பாடி  பழனிச்சாமியை ஒருமனதாக  தேர்வு செய்து அறிவித்துள்ளது. இந்நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவினர் அதிமுகவும்-பாஜகவும் கூட்டணியில் உள்ள நிலையில்  முதல்வர் வேட்பாளரை பாஜகவின் தேசியத் தலைமையே அறிவிக்கும் என கூறி வருகின்றனர்.

இது அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து  மோதலுக்கு வித்திட்டுள்ளது. ஆனால் அதிமுக அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, இதை பாஜக ஏற்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறிக் கொள்ளலாம் எனவும் பகிரங்கமாக கூறி வருகின்றனர். ஆனால் பாஜக தலைவர்கள் தங்களது கருத்தில் உறுதியாக இருந்துவருகின்றனர் இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக பாஜகவின் கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளரை பாஜகவின் தேசியத் தலைமையே அறிவிக்ககும் என கூறியுள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா கிளினிக்கை திறந்துவைத்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:-  கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக அதிமுக அரசு மாற்றியுள்ளது. தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நாடுகளில்கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது ஆனால் தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. 

வழக்கமாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும் என்ற  கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு, 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் சட்டமன்றத்தில் அதிமுகவே ஆட்சியைப் பிடித்தது என்றார். அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் பாஜகவை பொறுத்தவரையில் அது அகில இந்திய கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சி தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார். கூட்டணியில் மாநிலக் கட்சிகள் மட்டும் இருந்தால் மாநிலக் கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம், ஆனால் மாநில கட்சிகளுடன் அகில இந்திய கட்சி கூட்டணியில் இருக்கும் போது முதல்வர் வேட்பாளரை மாநில கட்சிகள் அறிவிக்க கூடாது  என்பதால், அகில இந்திய கட்சி அறிவிக்கும் என்றார். இவரின் இக் கருத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!