
வரும் 17ஆம் தேதி நரிக்குறவர் காலனியில் முதலமைச்சர் ஸ்டாலின் உணவருந்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுடன் வீடியோ காலில் பேசியபோது, வந்தால் சோறு போடுவீங்களா என முதலமைச்சர் கேட்க, கறிசோறு போடுவோம் அவர்கள் கூறிய நிலையில் முதல்வர் அவர்கள் வீட்டுக்கு சென்று உணவருந்த உள்ளதாக தெரிகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, மலைவாழ் இன மக்களின் பிரச்சினைகளை முன்வந்து தீர்குகம் முதல்வராக்க ஸ்டாலின் தன்னை முன்னிறுத்தி வருகிறார். மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் நரி குறவன் சமூகத்தினரின் குடியிருப்புக்கு சென்று அவர் அவர்களின் வீடுகளில் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட உதவிகளை வழங்கிவிட்டு வந்தார். அவரின் இந்த நடவடிக்கையை பலரும் வெகுவாக பாராட்டினர். தற்போதும் அவரைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிகள் ஆர். பிரியா. எஸ்.எஸ் தர்சினி, கே.திவ்யா ஆகியோர் சாதி ரீதியாக தங்களை பிறர் எப்படி ஒதுக்கி வைக்கின்றனர்.
பின்னர் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தது எப்படி, தங்கள் சமூகத்தில் இருந்து தாங்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன, இதற்கு முதல்வர் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என கூறி வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தனர். அது அப்போது வைரலானது, மாணவிகள் ஆங்கிலத்திலும் சரளமாக உரையாடியிருந்தனர், இது முதல்வரின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் மாணவிகளை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து பேசினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது ஆவடி நரிக்குறவர் காலனி புறக்கணிக்கப்படுகிறது. நீங்கள் வந்து உதவி செய்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர். உங்கள் கையால் நோட்டுப் புத்தகங்கள் வாங்கியுள்ளோம் என அவருடன் அளவளாவினார். டிவியில் தான் உங்களை பார்த்துள்ளோம், நேரடியாகவே பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதல்வராகிய நீங்களும் எங்களுக்கு தந்தையை போல தான், நீங்கள் நிச்சயம் எங்களுக்கு உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் பேட்டி கொடுத்தேன் என அவர்கள் கூற முதல்வர் அவர்களின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்து போனார். விரைவில் வந்து சந்திப்பதாக உறுதியும் அளித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த மாணவிகள் முதல்வருடன் வீடியோ காலில் உரையாடினர். அதற்கு அமைச்சர் நாசர் ஏற்பாடு செய்தார். நரிக்குறவர் சமூக மக்கள் சூழ்ந்து நிற்க ஸ்டாலின மாணவிகளுடன் பேசினார், அப்போது அங்கிருந்த மாணவியின் தாயார் உங்களை பார்த்தது ஒரு வாரத்திற்கு சாப்பிட்டது போல இருக்கிறது. ஐயா ஒரு முறை நேரில் வந்து பாருங்கள், எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தார். அப்போது முதலமைச்சர் உங்கள் வீட்டுக்கு வந்தால் சாப்பாடு போடுவீங்களா என்று முதல்வர் கேட்க உடனே அவர்கள் கறிசோறு போடுவோம் என்று பதிலளித்தனர்.
அப்போது மாணவி திவ்யா எம்பிசி பிரிவில் உள்ள நரிக்குறவர்களை மாற்றி எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது அனைத்தையும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்நிலையில்தான் மாணவிகளுக்கு வாக்கு கொடுத்தது போலவே முதலமைச்சர் ஸ்டாலின் ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியிலுள்ள அவர்களின் குடியிருப்புகளுக்கு நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 17ஆம் தேதி அங்கு சென்று உணவருந்த முதல்வர் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.