
தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்க்கும் மாற்றம் இந்த ஆண்டு வரும் என்றும், அனைவருக்கும் புதுவாழ்வும், புத்தெழுச்சியும், புது வளர்ச்சியும் வழங்கிடும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பதாக டி.டி.வி.தினகரன் தனது புது வருஷ வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் ,மலரும் இப்புத்தாண்டு அனைவருக்கும் சாதனையின் ஆண்டாக, நமக்குள் இத்தனை ஆண்டுகள் இருந்த கேள்விகளுக்கான விடையை கண்டுணரும் ஆண்டாக நாம் எதிர்பார்த்த மாற்றம், வடிவம் எடுக்கும் ஆண்டாக எங்கும் நிறைவு, எதிலும் நிறைவு என்று எட்டுத்திக்கும் மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்புத்தாண்டில், தமிழகத்தின் பெருமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து, மீண்டும் தலைநிமிர்ந்த தமிழகமாக தழைத்தோங்கிட, நம்மையெல்லாம் இயக்கும் ஆற்றலின் சக்தி ஜெயலலிதா வகுத்த அரசியல் பாதையில் நமது வெற்றிப் பயணத்தை தொடர்ந்திடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
சமூக பொருளாதார நிலையில் தமிழகம் செழித்திடவும், வலிமையும், வளமும், யாருக்கும் அடிபணியாத குணமும், நிறைந்த தமிழகத்தை மீண்டும் படைத்திடவும், ஒன்றுபட்டு நின்றிடுவோம் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இப்புத்தாண்டில், சகோதர நேசம் மேலோங்கி நின்றிடட்டும் - நம் அனைவருக்கும் புது வாழ்வும், புத்தெழுச்சியும், புது வளர்ச்சியும், வழங்கிடும், ஆண்டாக இவ்வாண்டு அமைந்திடட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதாக திரு. டிடிவி தினகரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.