தமிழக மருத்துவக் கல்வி இடங்களை திட்டமிட்டு பறிக்கும் பாஜக அரசு.. தமிழன் மருத்துவம் படிக்க கூடாதா.? வைகோ வேதனை.

By Ezhilarasan BabuFirst Published Nov 28, 2020, 4:33 PM IST
Highlights

அகில இந்திய தொகுப்பு முறை என்ற அக்கிரமத்தால் வெளிமாநில மருத்துவர்கள் இந்த இடங்களை அபகரித்துக் கொள்ளும் நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. அகில இந்திய தொகுப்பு என்பதையே ஒழித்துக்கட்ட வேண்டும்.

மருத்துவக் கல்வியில் தமிழகத்தின் உரிமைகளை பலி கொடுத்து வரும் அதிமுக அரசின் கையறுநிலை கடும் கண்டனத்துக்கு உரியது என வைகோ வேதனை  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம்.          

கிராமப்புற மற்றும் மலையகப் பகுதிகளில் பணிபுரியும் தமிழக அரசு மருத்துவர்களுக்கு எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததை மத்திய பா.ஜ.க அரசு தட்டிப் பறித்தது அதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு என்று சொல்லி தப்பித்தது. அதைப் போலவே அரசு மருத்துவர்களுக்கு டி.எம். ,எம்.சி.எச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததை ,இந்திய மருத்துவக் குழுவின் 2000 ஆவது ஆண்டின் விதிகளை காரணம் காட்டி மத்திய பா.ஜ.க அரசு இரத்து செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம்,உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.அதன் அடிப்படையில் தமிழக அரசு,உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை ஒன்றை வெளியிட்டது. இந்த அரசாணையும் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று நவம்பர் 27 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று திட்ட வட்டமாக தெரிவித்து விட்டது. அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ததை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்று இத்தீர்ப்பை அளித்து இருக்கிறது.

மத்திய பா.ஜ.க அரசின் வஞ்சகத்தால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1922 முதுநிலை மருத்துவ இடங்களிலும், 369 உயர் சிறப்பு மருத்துவ இடங்களிலும் தமிழகத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் முழுமையாக இடம் பெறும் வாய்ப்பு பறி போய் இருக்கிறது. அகில இந்திய தொகுப்பு முறை என்ற அக்கிரமத்தால் வெளிமாநில மருத்துவர்கள் இந்த இடங்களை அபகரித்துக் கொள்ளும் நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. அகில இந்திய தொகுப்பு என்பதையே ஒழித்துக்கட்ட வேண்டும். 

உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்விலிருந்து முழு விலக்குப் பெற தமிழக சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று (INI-CET) நுழைவுத்தேர்வு ஏஐஎம்எஸ், ஜிம்மர், பிஜிஐ சண்டிகர் போன்றவற்றிக்கு பா.ஜ.க அரசு நீட்டிலிருந்து எப்படி விலக்கு அளித்து இருக்கிறதோ அதைப் போன்று உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் விலக்கு பெற எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மருத்துவக் கல்வியில் தமிழகத்தின் உரிமைகளை பலி கொடுத்து வரும் அதிமுக அரசின் கையறுநிலை கடும் கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!