உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்.. திருமாவளவன் திட்டவட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2021, 1:35 PM IST
Highlights

ஷெகாவத் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளார். ஏனென்றால் ஒன்றிய அரசின் கொடுக்கப்பட்டுள்ள 4 நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்காத கர்நாடக அரசிற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் என்றார்

உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து அனைத்து கட்சி குழு டெல்லி சென்று திரும்பிய  நிலையில் அதில் இடம்பெற்றிருந்த திருமாவளவன், செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். 

மத்திய அமைச்சரை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் கூட்டாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக துரைமுருகன் கூறியதாவது:- ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சந்திப்பில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கை மேகதாது அணை கட்டக் கூடாது என்பது தான், அதனை சந்திப்பின் வாயிலாக அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வந்துள்ளோம் மற்றும் மேகதாது அணை கட்டுவதற்கான சரியான வழிமுறைகளை கர்நாடக அரசு செய்யவில்லை. அண்டை மாநிலங்களின் ஒப்புதலைப் பெறவேண்டும், காவிரி ஆணையத்திடம் முழு ஒப்புதல் பெற்று வரவேண்டும், இதனை எதுவுமே கர்நாடக அரசு செய்யவில்லை. ஆகவே ஒன்றிய அரசின் நெறி முறைகளை சரியாக கடை பிடிக்காததால் ஒன்றிய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்காது என மத்திய அமைச்சர் ஷெகாவத் தெரிவித்துள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  கூறினார். 

பின்னர் திருமாவளவன் பேசுகையில், ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கும் விதமாக அமைந்தது. ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளார். ஏனென்றால் ஒன்றிய அரசின் கொடுக்கப்பட்டுள்ள 4 நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்காத கர்நாடக அரசிற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் என்றார், அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திருமாவளவன், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில்  உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என்றும், தேதி அறிவித்த பின்பு அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார். 

 

click me!