ராஜ்யசபா சீட் தருபவர்களிடம் மட்டுமே கூட்டணி வைக்கமுடியும் என தேமுதிக கூறி வருவதால், அதிமுக மற்றும் பாஜகவுடன் தொகுதி பங்கீடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது
தேர்தல்- கூட்டணி உடன்பாடு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தனது முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அதன் படி இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கியுள்ளது. அடுத்ததாக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. விரைவில் உடன்பாடு எட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
undefined
போட்டி போடும் அதிமுக- பாஜக
அதே நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், இரண்டு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் தற்போது வரை எஸ்டிபிஐ மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், தேவநாதன் ஆகிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வமும் பாஜக கூட்டணியில் இணைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுக்க அதிமுக - பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் ராஜ்யசபா பதவி கேட்பதால் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லையென கூறப்படுகிறது.
ராஜ்யசபா சீட்டிற்கு நோ
அதிமுக தரப்பில் பாமகவிற்கு ராஜ்யசபா இடம் தர உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தங்களுக்கும் ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என தேமுதிக கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் தற்போது அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் மூலம் ஒரு ராஜ்ய சபா எம்பியை மட்டுமே உறுதியாக தேர்வு செய்ய முடியும், அதிமுகவில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் இரண்டு எம்பி சீட் கிடைப்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக ராஜ்யசபா சீட் வழங்க முடியாத நிலை இருப்பதாக அதிமுக தேமுதிகவிடம் தெரிவித்து விட்டது.
கூடுதல் தொகுதி ஒதுக்க ஓகே சொன்ன அதிமுக
அதே நேரத்தில் தேமுதிக கேட்கும் 7 தொகுதிகளில் 3 தொகுதிகளை வழங்க தயார் என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி, விருதுநகர் தொகுதிகளை தர தயார் எனவும், ஆனால் மதுரை தொகுதி அதிமுகவை சேர்ந்த ராஜ் சத்யனுக்கு ஒதுக்கப்பட இருப்பதால் அந்த தொகுதி தர முடியாது எனவும் அதிமுக தேமுதிகவிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தொகுதி பங்கீடு இன்னும் முடிவு எட்டப்படாத நிலை உருவாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
AIADMK - PMK Alliance: அதிமுகவுடன் பாமக கூட்டணியா? உண்மையை போட்டுடைத்த அன்புமணி.!