
ஓபிஎஸ்சை அவமதித்த பிடிஆர் ?
தமிழக நிதி நிலை அறிக்கை கடந்த 18 ஆம் தேதி நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் சட்டமன்றத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இதனையடுத்து இன்று சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பதிலுரை வழங்கினார். இதனை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும், 10 ஆண்டுகள் நிதித்துறை அமைச்சராகவும் ஓ.பன்னீர் செல்வம் இருந்ததாக தெரிவித்தார். நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் தனது அனுபவமிக்க கருத்துகளை அவையில் கூறி வந்ததாக தெரிவித்தார். தனது கருத்துகளை கூறிக்கொண்டு இருக்கும் போதே நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவையில் இருந்து திட்டமிட்டு வெளியேறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
பேப்பரை தூக்கி எறிந்த நிதி அமைச்சர்
நிதித்துறை அமைச்சர் உறுப்பினர்களின் கருத்தை கேட்டு பதில் அளிக்க வேண்டும் இது தான் மரபு, ஆனால் அவையில் இருந்து நிதி அமைச்சர் வெளியேறியது அவை கண்ணியத்திற்கு குறைவு என கூறினார். மேலும் எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசிக்கொண்டு இருக்கும் போது வேண்டும்மென்றே திட்டமிட்டு வெளியேறியதாக குற்றம்சாட்டினார். இந்த செயல் எதிர்கட்சிகளை அவமானப்படுத்தியதாக கூறினார். எனவே இதனை கண்டித்துதான் இன்றைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறினார். மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நிதித்துறை அமைச்சர் எரிச்சலோடு அவையில் இருந்து வெளியேறியதாகவும் அப்போது தனது கையில் வைத்திருந்த பேப்பரை தூக்கி எறிந்து விட்டு சென்றதாகவும் குற்றம்சாட்டினார். மக்கள் பிரச்சனைகள் தொடர்பாகவும், நிதி நிலை அறிக்கை தொடர்பாகவும் பேசிக்கொண்டிருக்கும் போது பிரதான எதிர்கட்சிகளின் பேச்சை கூட கேட்காமல் அவையில் இருந்து நிதி அமைச்சர் வெளியேறியது தங்களை அவமானப்படுத்தியதாக கூறினார்.
சபாநாயகர் கருத்து வேதனை தருகிறது
மேலும் சபாநாயகர் சட்டப்பேரவையில் தங்களது வெளிநடப்பு தொடர்பாக நொண்டி சாக்கு என தவறான கருத்துகளை கூறியது வேதனை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். சபாநாயகர் கட்சி உறுப்பினராக இருந்தாலும் சபாநாயகர் பொறுப்பை ஏற்றதும் நீதியரசருக்கு சமமானவர் என கூறினார்.மேலும் சட்டப்பேரவையில் தங்களை அவமானம்படுத்தும் போது எப்படி உள்ளே இருக்க முடியும் என தெரிவித்தவர் இதன் காரணமாகத்தான் பட்ஜெட் பதிலுரையை புறக்கணித்தாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.