11 மணி நேரமாக நடந்த ரெய்டில் சிக்கியது ரூ. 13 லட்சம்.. எஸ்.பி.வேலுமணி வீட்டில் வேறு என்னென்ன சிக்கின.?

By Asianet TamilFirst Published Aug 10, 2021, 8:44 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் நடந்த ரெய்டில் ரூ.13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
 

 உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவருடன் தொடர்புடையவர்கள், நெருக்கமானவர்கள் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஓரிடத்தில் இந்தச் சோதனை நடைபெற்றது. காலையிலிருந்து 11 மணி நேரம் நடைபெற்ற சோதனை மாலையில் நிறைவடைந்தது. இந்நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ.13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சோதனையில் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஹார்டு டிஸ்க்குகள், முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

click me!