
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த ஜிதன் ராம் மாஞ்சிக்கு நிகழ்ந்த அதே கதிதான், இப்போது தமிழகத்தில் அ.தி.மு.க.வில்முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேர்ந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடி அலையில் சிக்கி பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பு ஏற்று, முன்பு வாக்குறுதி அளித்தவாறு முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.
தனது தீவிர விசுவாசியும், தலித் பிரிவைச் சேர்ந்தவரானஜிதன் ராம் மாஞ்சியை முதல்வராகத் அமர வைத்தார்.
9 மாதங்கள் மட்டுமே மாநிலத்தை ஆண்ட மாஞ்சியின் நிர்வாகத்தில் பல சீர்கேடுகள் ஏற்பட்டன, சிக்கல்கள் உருவாகின. இதனால், அவரை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் பதவிக்கு வர விரும்பினார்.
இதே நிலைதான் ஏறக்குறைய தமிழகத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்டது. அதிமுக சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டபின், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடியாது எனவும், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யக் கூறினார்கள் என குற்றச்சாட்டு வைத்தார்.
இதேபோலவே கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி நிதிஷ் குமாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தான் ஒன்றும் ‘ரப்பர் ஸ்டாம்பாக’ இருக்க விரும்பவில்லை, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றார்.
அதன்பின், மாநில ஆளுநர் என். திரிபாதி, 20 ந்தேதி பெரும்பான்மையை நிரூபிக்க மாஞ்சியிடம் ெதரிவித்தார். ஆனால், அது கட்சியும் எம்.எல்.ஏ.க்களும் நிதிஷ் குமார் வசம் இருந்ததால், சாத்தியமில்லை எனத் தெரிந்து, பெரும்பான்மை நிரூபிக்கும் தேதிக்கு முன்பே பதவியை மாஞ்சி ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு தனிமரமாக நின்றார்.
இதேபோலவே ஆளுநர் வித்யாசகர் ராவிடம், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அதை நம்பி, பெரும்பான்மை பலம் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை பதவி ஏற்க தாமதம் செய்து, ஓ.பன்னீர் செல்வத்துக்கு முன்னுரிமை கொடுக்க காத்திருந்தார்.
ஆனால், சட்டநெருக்கடி அதிகரிக்கவே, எடப்பாடியை பதவி ஏற்க அழைத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
தன்னால், நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனத் தெரிந்த ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கிராமங்களில் உள்ள சொலவடை கூறுவார்கள், ‘கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பனுக்கு புத்தி எங்கே போச்சு’ என்பார்கள். அதுபோல், பாரதிய ஜனதாகட்சியின் ஆதரவையும், பேச்சையும் நம்பி களத்தில் அப்போது, ராம் மாஞ்சி தனது கட்சிப் பொறுப்பையும், மதிப்பையும் கெடுத்துக் கொண்டார்.
அதேபோல இப்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தனக்கு கட்சியில் இருந்த பெயரைக் பாழ்படுத்திக் கொண்டு நிராதரவாக நிற்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.
பீகாரில் அப்போது அரசியல் குழப்பத்தை உண்டாக்க பாரதிய ஜனதா கட்சிதான் முயற்சித்தது என்று முதல்வர் நிதிஷ்குமார் வெளிப்படையாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், அதை மறுத்த பாரதிய ஜனதா கட்சி, மாஞ்சியின் முதுகை தட்டிக்கொடுத்து உசுப் பேற்றி வந்தது.
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க முடியாமல் ஆளுநரை தாமதப்படுத்திய மத்திய அரசு, ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை பலமாக ஆதரித்தது. அவருக்கு அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழகத்தின் குழம்பிய குட்டையில் பாரதிய ஜனதா ஓ.பன்னீர் செல்வம் மூலம் மீன்பிடிக்க பார்க்கிறது என்று பெரும்பாலான கட்சிகள் குற்றம்சாட்டியதை மறுத்த பாரதியஜனதா, ஓ.பி.எஸ்சை தட்டிக்கொடுத்து வந்தது.
இந்த போராட்டத்தின் முடிவில் பீகாரில் மீண்டும் நிதிஷ்குமார் தலைமை வந்தது. போர்க்கொடி தூக்கிய மாஞ்சி இந்துஸ்தான் அவாமி மோர்சா எனும் கட்சியை தொடங்கி, பாரதிய ஜனதா பக்கம் சாய்ந்தார்.
அதேபோன்ற நிலைமைதான் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இப்போது ஏற்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மக்களை சந்தித்து நீதி கேட்கும் போராட்டம் நடத்தப் போவதாகத் அறிவித்தார். இந்த நீதி கேட்கும் போராட்டத்தின் அடுத்த பரிணானம் புதிய கட்சி அறிவிப்பாக இருக்குமா? என்பது தெரியவில்லை.
பலிகொடுக்கப்பட்டுவிட்டது, கட்சிகளை உடைக்கப் போட்ட திட்டம் நடக்கவில்லை, அப்போது பலியானவர் மாஞ்சி, இப்போது ஓ.பி.எஸ்.....