மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி..!! எடப்பாடியாரை கையெடுத்து கும்பிட்ட மு.க ஸ்டாலின்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2020, 12:45 PM IST
Highlights

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இருமொழிக் கொள்கையையே கடை பிடிப்போம் என உறுதிபட தெரிவித்து,  அம்மாவின் அரசு மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
 

மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள புதிய கல்வி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மும்மொழி திட்டத்தை திடமாக எதிர்த்துள்ள தமிழக முதலமைச்சருக்கு நன்றி என திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் பாராட்டி வரவேற்றுள்ளார். மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கல்வித்துறை  அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக்கு பின்னர் முதலமைச்சர் சார்பில் அறிக்கை  ஒன்று வெளியானது. அதில் தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக பல கட்டங்களில் தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 

1965 ஆம் ஆண்டு இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது, அதனை எதிர்த்து தமிழகத்தில் மாணவர்களும் மக்களும் வீதியில் இறங்கி தீவிரமான போராட்டத்தை நடத்தினர். பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் இருமொழிக் கொள்கையை  கட்டிக் காத்து வந்தனர். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணிக்க கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்.  மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழியில் நடக்கும் இந்த அரசு, இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இருமொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து,  அம்மாவின் அரசு மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதை கொள்கையாக கொண்டுள்ளனர், இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில், முன்மொழி கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பாரதப் பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும், அந்த பாதிப்பினை கலைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு அம்மாவின் அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சரின் இந்த முடிவை  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வரவேற்று பாராட்டி உள்ளார். 

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி! மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

click me!