தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்.. சிபிஐ விசாரணைக்கு தடை கோரும் தமிழக அரசு.. வரவேற்கும் காம்ரேட்டுகள்.!

Published : Feb 03, 2022, 11:06 PM IST
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்.. சிபிஐ விசாரணைக்கு தடை கோரும் தமிழக அரசு.. வரவேற்கும் காம்ரேட்டுகள்.!

சுருக்கம்

முத்துவேல் எடுத்த வீடியோவை உடனடியாக அவர் போலீசில் ஒப்படைக்காதது மற்றும் புகார் செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு விடையளிக்கவில்லை. மாணவி இறப்பதற்கு முன்னால் அந்த வீடியோவை ஏன் அவர் வெளியிடவில்லை என்ற கேள்விக்கும் விடையில்லை.

தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தொடர்ச்சியாக தலையிட்டு சில கோரிக்கைகளை முன்வைத்து வற்புறுத்தி வந்துள்ளோம். எந்தக் குழந்தையும் தற்கொலைக்குத் தள்ளப்படக் கூடாது, இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வற்புறுத்தி வந்துள்ளோம். காவல்துறையும், தமிழக அரசும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இப்பிரச்சனையில் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மாணவி லாவண்யாவின் தந்தை முருகேவல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 21.1.2022 அன்று இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிட வேண்டுமென கோரப்பட்டது.


 
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கு விசாரணையை அவசர, அவசரமாக நடத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனில் வழக்கு விசாரணையின் போதே சி.பி.ஐ.யையும் பிரதிவாதியாக சேர்த்து நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் இவ்வழக்கில் சி.பி.ஐ.யை பிரதிவாதியாக சேர்க்காமலேயே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருந்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.  மாணவி 9.1.2022 அன்று விஷம் குடித்துள்ளார். அதையும் கூட அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஒருவாரம் கழித்து 15.1.2022 அன்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் மூலமாகத்தான் அது தெரிய வந்துள்ளது. 

19.1.2022 மாலை அவர் இறந்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் தனது பெற்றோர்கள், உறவினர்கள், சக மாணவர்கள் யாரிடமும் தான் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக அவர் தெரிவிக்கவில்லை. 16.1.2022 அன்று காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்திலும் மறுநாள் 17.1.2022 நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்திலும் மதமாற்றம் பற்றி எதையும் அவர் கூறவில்லை. தன்னை விடுதி வார்டன் சகாயமேரி அதிக வேலைவாங்கி தொந்தரவு செய்தார் என்ற காரணத்தையே திரும்பத் திரும்ப கூறியுள்ளார். ஆனால் மாணவியின் உறவினரும், விஸ்வ இந்து பரிசத் பொறுப்பாளருமான முத்துவேல் 17.1.2022 மாணவியை வீடியோ எடுத்தபோது மட்டும் மதமாற்றம் பற்றி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
இவைகளையெல்லாம் பட்டியலிட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பில் முத்துவேல் எடுத்த வீடியோவை உடனடியாக அவர் போலீசில் ஒப்படைக்காதது மற்றும் புகார் செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு விடையளிக்கவில்லை. மாணவி இறப்பதற்கு முன்னால் அந்த வீடியோவை ஏன் அவர் வெளியிடவில்லை என்ற கேள்விக்கும் விடையில்லை. ஆனால், அதேசமயம் மாவட்ட காவல்துறை மதமாற்றம் இல்லை என பேட்டியளித்தது விசாரணையை முடமாக்கும் நோக்கத்தோடு வெளியிட்டுள்ளதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாநில கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மதமாற்றத்திற்கான முகாந்திரம் இல்லை என கூறியுள்ளதால் மாநில அரசின் விசாரணையில் உரிய நியாயம் கிடைக்காது என்ற மனுதாரரின் (மாணவியின் தந்தை) புகாரை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
 
இவ்வழக்கின் தீர்ப்பில் இரண்டு திரைப்பட வசனங்களையும், ஆங்கில தினசரியில் வந்த கட்டுரைகளையும் நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். புனைவுக் காட்சிகளைக் கொண்டுள்ள திரைப்பட வசனங்களை அடிப்படையாகக் கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்புரை எழுத முடியமா என்ற கேள்வியெழுகிறது. மதமாற்றம் தொடர்பான மிக முக்கியமான பிரச்சனையில் திரைப்பட காட்சிகளை அடிப்படையாக கொண்டிருப்பது விநோதமாக உள்ளது.  இப்பிரச்சனையில் காவல்துறையின் விசாரணை முடிவடைவதற்கு முன்பே நீதிமன்றம் அந்த விசாரணை முறையான திசைவழியில் செல்வதாக தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது ஏற்புடையதாக இல்லை. மட்டுமின்றி மதமாற்றம் தொடர்பான பிரச்சனையை மாநில காவல்துறையும், மாநில அரசும் நியாயமான முறையில் விசாரிக்கவில்லை என கூறுவதின் மூலம் மாநில அரசு மற்றும் காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்வியெழுப்புவதாகவும் தீர்ப்பு அமைந்துள்ளது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.


 
இதுமட்டுமின்றி மைக்கேல்பட்டி என்ற பெயர் அந்த ஊருக்கு ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக யாராவது விசாரித்தால் நல்லது என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் தமிழகத்தில் மதமாற்றம் தொடர்பான பிரச்சனையை செயற்கையாக பூதாகரமாக கிளப்பி அரசியல செய்ய நினைக்கும் சங்பரிவாருக்கு உதவுவதாக உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துவிடுமோ என்ற ஐயம் எழுகிறது.  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தேவையான அடிப்படை காரணங்கள் இந்த வழக்கில் இல்லாத போதும், அப்படி ஒன்று இருப்பதாக நீதிமன்றம் முடிவுக்கு வந்ததும், அதுவும் வழக்குத் தொடுத்து 10 நாளில் இவ்வாறு முடிவுக்கு வந்ததும் இயல்பானதாக இல்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். உரிய ஆதாரங்களுடன் இத்தீர்ப்பினை ரத்து செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.” என்று அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!