EXCLUSIVE தேவேந்திர குல வேளாளர்களின் மொத்த ஆதரவும் மோடிக்கே..! திமுக வாக்குகளை கொத்தாக அள்ளும் பாஜக - தங்கராஜ்

By karthikeyan VFirst Published Feb 14, 2021, 8:48 PM IST
Highlights

பட்டியலினத்தை சேர்ந்த 7 உட்பிரிவுகளை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் தங்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் என்று இந்த கோரிக்கையை பல்லாண்டுகளாக வலியுறுத்திவரும் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
 

தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7  உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்று அச்சமூக மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். அந்த கோரிக்கை குறித்து மானுடவியல் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையின் அடிப்படையில், இந்த கோரிக்கையை நிறைவேற்றலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, இதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் இன்றைய சென்னை விழாவில் பேசிய பிரதமர் மோடியும் தேவேந்திர குல வேளாளர் குறித்து பெருமையாகவும், சட்டத்திருத்த மசோதா குறித்தும் பேசினார்.

தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கை நிறைவேறவுள்ள நிலையில், 2010ம் ஆண்டிலிருந்து இதற்காக போராடிவரும் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தங்கராஜ் அவர்கள் நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டி: 

தேவேந்திர குல வேளாளர் என்ற கோரிக்கை சாதிய ரீதியிலான கோரிக்கை அல்ல; பண்பாட்டு ரீதியான கோரிக்கை. ஒரே மாதிரியான வாழ்வியல், பழக்கவழக்கங்கள், பண்பாட்டை கொண்ட தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பண்பாட்டு ரீதியாக வலியுறுத்தினோம்.

2010ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் அனைத்து சமுதாய மக்களையும் திரட்டி மாபெரும் நடத்தினோம். அந்த மாநாட்டில் மேற்கூறிய 7 உட்பிரிவுகளையும் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினோம். அனைத்து சமுதாய மக்களையும் திரட்டி தீர்மானம் நிறைவேற்றியது தேசிய அளவில் கவனம் ஈர்த்தது.

 

மத்திய பிரதேசத்தில் ஒரு மாநாட்டில் பேசிய முன்னாள் பாஜக தேசிய தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தேவேந்திர குல வேளாளர்  சமூகத்தை பற்றி பெருமையாக பேசினார். அதை கேள்விப்பட்டதும், அவரை 2015ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட மாநாட்டிற்கு அழைத்தோம். அதில் கலந்துகொண்டு, தீர்மானத்தில் கையெழுத்திட்ட அமித் ஷா, அதே மேடையிலேயே, இதுகுறித்த கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வழங்குவதற்கான ஏற்பாட்டையும் செய்துகொடுப்பதாக உத்தரவாதம் அளித்து அதை செய்தும் கொடுத்தார். இதையடுத்து, 100 பேருடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினோம்.

2017ம் ஆண்டு தமிழக அரசிடம் இதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்தோம். மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், தமிழக அரசு சுமதி தலைமையிலான மானுடவியல் கமிட்டி அமைத்து, ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு முடிவுகளின் ரிப்போர்ட்டை ஹன்ஸ்ராஜ் வர்மா கமிட்டி சமர்ப்பித்தது. அந்த ஆய்வு ரிப்போர்ட், எங்கள் கோரிக்கை பண்பாட்டு ரீதியிலானதுதான் என்பதை உறுதிப்படுத்தியதன் விளைவாகத்தான் எங்கள் நீண்டகால கோரிக்கை நிறைவேறப்போகிறது.

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு கேட்ட ஒரே விஷயம் மானுடவியல் ஆய்வறிக்கை. அதற்கான முன்னெடுப்புகளை நாங்கள் எடுத்தோம். இதன்மூலம் சாதிய அமைப்புகளை மானுடவியல் என்ற கோணத்தில் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் உருவாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட, தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்றே இதை குறிப்பிட்டுள்ளார். பண்பாடு என்ற சொல்லாடல் தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் நிலையில், இதுவரை தமிழகத்தில் தூக்கிப்பிடிக்கப்பட்ட திராவிடம் நீர்த்துப்போய்விட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேவேந்திர குல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம் என்பது தேர்தலை மனதில்வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையா? இது தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே ஹன்ஸ்ராஜ் வர்மா மானுடவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அப்போதே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் எந்தவொரு விஷயத்திற்கும் அதற்கான நேரம் வரும். அந்தமாதிரியான நேரம், இந்த தேர்தல் நேரமாக இருக்கலாமே தவிர, குறிப்பாக தேர்தலை மட்டுமே மனதில் வைத்து எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எப்போதுமே இருந்துவந்துள்ளது. அதற்கான நேரம் இப்போதுதான் வந்துள்ளது.

இது கண்டிப்பாக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். தேவேந்திர குல வேளாளர்களின் பெரும்பாலான ஓட்டு இதுவரை திமுகவிற்கே கிடைத்திருக்கிறது. அந்த நிலை இனி கண்டிப்பாக மாறும். தேவேந்திர குல வேளாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் பிரதமர் மோடிக்கே. பிரதமர் மோடியை 100 சதவிகிதம் ஆதரிக்கும் சமூகம் தேவேந்திர குல வேளாளர் சமூகம். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த திமுகவிற்கு ஓட்டளித்தவர்களில் பலர், இப்போதே பாஜகவிற்குத்தான் தங்கள் ஓட்டு என்பதை உறுதிப்படுத்திவிட்டனர்.

 

பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு தேவேந்திர குல வேளாளர்களின் ஓட்டு, பாஜகவை மையப்படுத்திய ஓட்டாகவே அமையும். அந்தளவிற்கு பிரதமர் மோடிக்கு எங்கள் சமூகத்தின் ஆதரவு இருக்கிறது என்று தெரிவித்த தங்கராஜ், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
 

click me!