மக்களவை தேர்தலில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தல் செலவுக்கு 1000 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளார் என தங்க தமிழ்செல்வன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தல் செலவுக்கு 1000 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளார் என தங்க தமிழ்செல்வன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விஐபி தொகுதிகளில் ஒன்றாக தேனி மக்களவை தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இதில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளளர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி பகுதியில் அமமுக கட்சியின் சார்பில் தேனி மக்களவை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கதிர்காமு இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் துவங்கினர். பெரியகுளம் ஒன்றிய பகுதியான ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பரிசு பெட்டி சின்னத்தை வைத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தின் போது தங்க தமிழ்செல்வன் கூறுகையில் டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பெரியகுளத்திலேயே தங்கியிருந்து மக்கள் குறைகளை தீர்த்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நான், டிடிவி, ஒபிஎஸ் மூவரும் ஒரே வாகனத்தில் வந்த நிலையில், டிடிவியால் மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக அறிமுகம் செய்யப்பட்ட ஒபிஎஸ் முதலமைச்சர் வரை உயர்ந்துள்ளார். முதல்வர் அளவுக்கு உயர்த்திய குடும்பத்தையே ஒபிஎஸ் குடும்பத்தினர் எதிர்த்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தல் செலவுக்கு 1000 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளார். அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு தனக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதேபோல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமமுக வேட்பாளர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை அரசு சுமத்தி வருகிறது என தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.