கெத்து காட்டிய ஓபிஎஸ் மகன்..! தங்கதமிழ்ச்செல்வன் திமுக பக்கம் திரும்பியதன் பின்னணி..!

By vinoth kumarFirst Published Jun 30, 2019, 10:52 AM IST
Highlights

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் செய்த உள்ளடி வேலைகளால் தங்கதமிழ்ச்செல்வன் திமுக பக்கம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் செய்த உள்ளடி வேலைகளால் தங்கதமிழ்ச்செல்வன் திமுக பக்கம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு அமமுகவை கை கழுவ தங்கதமிழ்ச்செல்வன் முடிவெடுத்துவிட்டார். இந்த தகவலை அறிந்த எடப்பாடி பழனிசாமி எஸ்பி.வேலுமணி மூலமாக தங்கதமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க முயற்சி மேற்கொண்டார். ராஜ்யசபா எம்பி பதவி, தேனி மாவட்டச் செயலாளர் பதவி என அடுக்கடுக்கான டிமாண்டுகளை எடப்பாடி தரப்பிடம் தங்கதமிழ்ச்செல்வன் தரப்பு முன்வைத்தது. 

ஆனால், அந்த இரண்டுக்குமே வாய்ப்பு இல்லை மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் பொறுப்பு சட்டமன்ற இடைத்தேர்தலில் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என எடப்பாடி தரப்பு பேசிக் கொண்டிருந்தது. ஆனால் அமைப்புச் செயலாளர் பதவி என்பது அலங்காரமான பதவி மேலும் ஆண்டிப்பட்டியில் எம்எல்ஏவாக மேலும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால் தங்கதமிழ்ச்செல்வன் பிடிகொடுக்கவில்லை.

இந்த நிலையில் திமுக தரப்பில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் கலைராஜன் ஆகியோர் தங்கதமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டனர். திமுக தரப்பிலும் ராஜ்யசபா எம்பி மற்றும் தேனி மாவட்டச் செயலாளர் பதவிகளையே தங்கதமிழ்ச் செல்வன் கேட்டுள்ளார். ஆனால் எம்.எல்.ஏ.வாக வந்திருந்தால் இதற்கு வாய்ப்பு தற்போது தான் எம்.எல்.ஏ இல்லையே என்று கூறி திமுக தரப்பு தங்கதமிழ்ச்செல்வனுக்கு பிடிகொடுக்கவில்லை. 

இந்த நிலையில் தினகரன் அளித்த வெளிப்படையான பேட்டியால் திமுக தரப்பு தங்கதமிழ்ச்செல்வனை தங்களுடன் இணைக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனை பயன்படுத்தி எஸ்.பி.வேலுமணி மீண்டும் தங்கத்திடம் பேசியுள்ளார். ஆனால் தங்கதமிழ்ச்செல்வன் மாவட்டச் செயலாளர் பதவி என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சிடம் பேசியதாக சொல்கிறார்கள். 

ஆனால் ஓபிஎஸ் தங்கதமிழ்ச்செல்வனை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவே கூடாது, அந்த ஆள் பேசிய பேச்சுக்கு அவரை வைத்துக் கொண்டு நான் எப்படி தேனியில் அரசியல் செய்ய முடியும் என்று வெளிப்படையாகவே எடப்பாடியிடம் சீறியதாக சொல்கிறார்கள். இதற்கு இடையே தங்கதமிழ்ச்செல்வன் கட்சி தாவ உள்ள தகவலை பயன்படுத்தி அவரது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பேசியுள்ளார்.

தங்கத்துடன் சென்றால் ஒன்றும் கிடைக்காது இப்போதே அவரையும், அமமுகவையும் உதறிவிட்டு வாருங்கள் அனைவருக்கு உரிய பதவிக்கு நான் கேரண்டி என்று ஆசை காட்டியுள்ளார். இதனை நம்பி சில தங்கதமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய தயாராகிவிட்டனர். இதனை அறிந்து அதிர்ந்து போன தங்கதமிழ்ச்செல்வன் இனியும் தாமதித்தால் திமுகவிலும் கதவு அடைக்கப்பட்டுவிடும் என்று பதவியுள்ளார்.

உடனடியாக செந்தில்பாலாஜியை சந்தித்து கொடுப்பதை கொடுங்கள் என்று கூறி ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறுகிறார்கள். தற்போது இறுதிகட்ட பேச்சு நடைபெற்று முடிந்துவிட்டதாகவும் எந்த நேரத்திலும் ஸ்டாலினை தங்கதமிழ்ச்செல்வன் சந்திப்பார் என்கிறார்கள். அதே சமயம் கடைசி முயற்சியாக வேலுமணியும் தங்கதமிழ்ச்செல்வனிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

click me!