தங்க தமிழ்ச்செல்வனுக்கு சிக்கல்... நீதிமன்ற அவதூறு வழக்குத் தொடர அனுமதி!

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 3:51 PM IST
Highlights

தங்கதமிழ்ச்செல்வனின் மன்னிப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதைதொடர்ந்து, தங்கதமிழ்ச்செல்வன் மீது வக்கீல்கள் ஸ்ரீமதி மற்றும் கண்ணன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்க கோரி டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 19 எம்எல்ஏக்கள் கவர்னரிடம் புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து, 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதில் ஜக்கையன், தனது தரப்பு கருத்தை தெரிவித்தார். மற்ற எம்எல்ஏக்கள் எவ்வித கருத்துக்களும் கூறவில்லை. இதனால் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி அந்த உத்தரவு சட்டவிரோதம் என தீர்ப்பளித்தார். இதுபோன்ற வெவ்வேறு தீர்ப்பால் வழக்கின் முடிவுக்காக 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

இந்த தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன், கடந்த  ஜூன் 17ம் தேதி தொலைக்காட்சி பேட்டிகளில் நீதிமன்றத்தை விமர்சனம் செய்தார். தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி குறித்து நேரடியாக விமர்சனம் செய்த அவர், தகுதி நீக்கத்தை எதிர்த்து தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். 

இந்நிலையில், தலைமை நீதிபதியை விமர்சனம் செய்த தங்கதமிழ்ச்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற பதிவகத்தில் வழக்கறிஞர் ஸ்ரீமதி மனு தாக்கல் செய்தார். இதேபோல் கண்ணன் என்பவரும் புகார் கொடுத்தார். கிரிமினல் நடவடிக்கை என்பதால் இந்த மனுக்கள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, தங்கதமிழ்ச்செல்வன் ஆஜராகுமாறு அட்வகேட் ஜெனரல் சம்மன் அனுப்பினார். அதன் அடிப்படையில், அட்வகேட் ஜெனரல் முன்பு ஆஜரான தங்கதமிழ்ச்செல்வன் தனது பேட்டிக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். 

அதை ஏற்க மறுத்த அட்வகேட் ஜெனரல், மன்னிப்பு வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே உள்ளது என்று கூறி தங்கதமிழ்ச்செல்வனின் மன்னிப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதைதொடர்ந்து, தங்கதமிழ்ச்செல்வன் மீது வக்கீல்கள் ஸ்ரீமதி மற்றும் கண்ணன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

click me!