மு.க.ஸ்டாலின், டிடிவி மக்களை தூண்டி விடுகிறார்கள்...! அமைச்சர் ஜெயக்குமார் கடுங்கோபம்!!

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 1:56 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அம்முக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அம்முக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- கஜா புயலால் பல லட்சம் மரங்கள் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன என செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால், அதுப்போல் எதுவும் நடக்கவில்லை. எந்த புயல் ஏற்பட்டாலும், லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தது இல்லை. ஆயிரக்கணக்கான வீடுகளும் இடிந்தது இல்லை. 

கேரளாவிலும் இயற்கை பேரிடர் ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அரசியல் கட்சியினர் பொதுமக்களின் நிலையை கண்டு, மனசாட்சியோடு, பொது உணர்வோடு, கட்சிகளுக்கு அப்பார்ப்பட்டு ஓரணியில் திரண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், தமிழக அரசியலில் அதுபோன்று யாரும் கிடையாது.

தமிழக அரசியலில் பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது என்ற செயலில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லும்போது, முதலில் அதிகாரிகளை பாராட்டுகின்றனர். பின்னர் அங்குள்ள மக்களிடம் உங்களுக்க நிவாரணம் கிடைக்காது, மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுங்கள் என தூண்டிவிடுகிறார்கள். 

அப்பாவிமக்களை வஞ்சிக்கும் வகையில் யாருக்கும் நிவாரணம் கிடைக்காது. போராடுங்கள் என தூண்டுவது தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது. ஆனாலும், இந்தியாவிலேயே என்ன பாதிப்பு ஏற்பட்டாலும், முறையாக அனைவருக்கும் நிவாரணத்தை வழங்குவது ஜெயலலிதாவின் அதிமுக அரசு தான். இந்த கஜா புயல் மட்டுமல்ல சுனாமி, வர்தா, தானே புயல் என எது வந்தாலும், அதை எதிர்க்கொள்ளும் ஒரே அரசு, ஜெயலலிதாவின் அரசு. ஜெயலலிதா எங்களுக்கு பாடங்களை கற்று கொடுத்துள்ளார். அவர் கற்று கொடுத்த பாடத்தின்படி, முதல்வர் எடப்பாடி சிறப்பாக செயல்பட்டு, மக்களை காப்பாற்றி வருகிறார்.  

குறிப்பாக புயல் பாதிப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைபொது செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர்  மக்களை தூண்டி விடுகின்றனர். தேவையில்லாமல் மக்களிடம் வீண் வதந்திகளை பரப்பி, ஏற்று கொள்ள முடியாத பொய் பிரச்சாரம் செய்கிறது. திமுக ஆட்சி காலத்தில் நிஷா புயல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் என்ன பணிகளை செய்தார்கள். அப்போதைய சேதம் என்ன. அந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள். அதை கணக்கு பார்த்தால், நாங்கள் செய்யும் மீட்பு பணிகள் அதிகம். 

தற்போது ஏற்பட்டுள்ள கஜா புயல் ஒரு மினி சுனாமி என கூறலாம். 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை படிப்படியாக முழுமையாக சரி செய்துவிடுவோம். ஐஏஎஸ் அதிகாரிகள் முழுமையாக களப்பணியாற்றுகிறார்கள். இதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

click me!