அத்திவரதரை தரிசிக்க சிபாரிசு கடிதம் கொடுத்த தமிமுன் அன்சாரி….

By Selvanayagam PFirst Published Aug 11, 2019, 12:15 AM IST
Highlights

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அத்திவரதரை தரிசிக்க நாகை தொகுதி எம்எல்ஏ தமீமுன் அன்சாரி பரிந்துரை கடிதம் கொடுத்திருப்பது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் முதலில் படுத்த கோலத்திலும், தற்போது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அன்று முதல் இன்று வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்து விடுகின்றனர்.

தற்போது அத்திவரதரை  காண சில தினங்களே இருப்பதால் தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் காஞ்சிக்கு வருகை கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கிவிட்டனர்.. ஆனால் கூட்ட நெரிசல் செய்திகளை கேள்விப்பட்டதுமே, தொலைதூர மாவட்ட மக்களுக்கு பீதி ஏற்பட்டுவிடுகிறது. எப்படியும் தரிசனம் செய்ய ஸ்பெஷல் பாஸ் கிடைக்காது என்பதால், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களை முடிந்த அளவு பெற்று செல்கிறார்கள்.

நாத்திக கொள்கைகளைப் பின்பற்றி வரும் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் அத்திவரதரை தரிசிக்க பொது மக்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்  நாகப்பட்டினம் பகுதியைச்  சேர்ந்த இளைஞர்கள் சிலர்  எம்எல்ஏ தமீமுன் அன்சாரியிடம் சென்று, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுள்ளனர். ரோட்டோர கடையில் அன்சாரியை பார்த்ததுமே இளைஞர்கள் உரிமையுடன் சென்று இவ்வாறு கேட்டனர். 

உடனே அன்சாரியும், தனது லட்டர் பேடை எடுத்து, பரிந்துரை கடிதம் எழுதி அவர்களிடம் தந்தார். அதை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் காஞ்சிபுரம் நோக்கி செல்லத் தொடங்கினர்.

ஒரு இஸ்லாமின எம்எல்ஏ  தன் தொகுதியை சேர்ந்த பக்தர்களுக்கு அத்திவரதரை தரிசிக்க  ஏற்பாடு செய்தது பொது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

click me!