
தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே ஆகணும் அதுக்கு எல்லாம் பா.ஜ.க தான் காரணமா என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. ஜெயலலிதா மரணம், மரணத்தில் மர்மம், அதிமுக பிளவு, பிளவின் பின்னணி, ஆட்சி மாற்றம், சசிகலா ஜெயில், தினகரனுக்கு பதவி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், இரட்டை இலை முடக்கம், பணபட்டுவாடா கண்டுபிடிப்பு, தினகரனுக்கும் ஜெயில், அமைச்சர்கள் பிளவு, ஒ.பி.எஸ் எடப்பாடி பேச்சுவார்த்தை, ஆட்சி கவிழும் நிலையின் பின்னணியில் பா.ஜ.க., என எக்கசக்க குழப்பங்கள் வளம் வருகிறது.
இவை அனைத்திற்கும் காரணம் பா.ஜ.க தான் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.கவின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது என்பதை தவிர எந்த ஆதாரமும் இல்லை.
அதிமுகவை பிரித்து நாங்கள் என்ன செய்ய போகிறோம்.
அதிமுகவை பிரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் கூவத்தூரில் இருக்கும்போதே நாங்கள் செய்திருப்போம்.
தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதிமுகவையும் பாஜகவையும் இணைத்து கொள்கிறார்கள்.
தவறு செய்தால் சிறைச்சாலையை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
ஒரு கட்சி இரண்டாக பிரிந்தால் நிச்சயமாக இரட்டை இலை கிடைக்காது.
ஓட்டுக்கு காசு கொடுத்தா தவறில்லையா? தவறு செய்தார்கள் மாட்டி கொண்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.