தாறுமாறாய் தாக்கும் தம்பிதுரை! திரைமறைவில் யாரு? மண்டையை பிய்த்துக் கொள்ளும் முதல்வர்கள்!

By vinoth kumarFirst Published Oct 31, 2018, 3:31 PM IST
Highlights

சீனியர் மோஸ்ட் மனிதரென்பதால் எடப்பாடியாரால் ஓரளவை தாண்டி தம்பிதுரையை கண்டிக்கவும் முடியலையாம். ஆனால் தம்பிதுரை கொடுக்கும் டார்ச்சரால்  மத்திய அரசு தரப்பு பாய்வதென்னவோ தமிழகத்தின் இரு முதல்வர்கள் மீதுதான். ‘அவரென்ன தினகரனுக்கு சப்போர்ட்டா செயல்படுறாரா?’ என்று ஓப்பனாகவே கோட்டை உயர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டார்

கருணாநிதிக்கு டெல்லியில் லாபி செய்ய முரசொலி மாறன் இருந்தது போல் தனக்கும் தேச தலைநகரில் வலுவான ஒரு நபரை எதிர்பார்த்தார் ஜெயலலிதா. சசி உறவுகள் மூலம் அதை செயல்படுத்திட நினைத்தார். ஆனால் அவரது வேல் லென்த்-க்கு அவர்கள் சரிப்பட்டு வரவில்லை. எனவே கட்சிக்குள்ளிருந்து தனது எம்.பி.க்கள் சிலரை அங்கே முன்னிலைப்படுத்தினார். நிலையாக ஒருவர் இல்லாமல் வழக்கமான ஜெ., ஸ்டைலில் யாராவது ஒருவர் மேலே வருவதும் பின் கீழே போவதுமாய் இருந்தனர். 

மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன், தம்பிதுரை, பாலகங்கா என்று இந்த லிஸ்டின் நீளம் அதிகம். ஆனால் இவர்களில் சிலர் மட்டும் டெல்லி லாபியில் சற்று தேர்ந்து விளங்கி ஜெ.,வின் குட்புக்கிலும் இடம் பிடித்தனர். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள் ஒன்று மைத்ரேயன், மற்றொருவர் தம்பிதுரை. தம்பிதுரையை மக்களவை துணை சபாநாயகர் எனும் பதவி வரை கொண்டு போய் அமர்த்தி பெரும் மரியாதையையும், கெளரவத்தையும் தந்தார் ஜெ., 

ஆனால் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் மைத்ரேயன் மிக முழுவதுமாக பன்னீர்செல்வத்தின் டெல்லி நிழலாய் மாறினார். தம்பிதுரையோ சசி சிறை சென்ற பின்னும் கூட சில நாட்கள் அவரது ஆதரவாளராய் இருந்தார். பின் மெல்ல மெல்ல எடப்பாடியார் அணியில் கரை ஒதுங்கினார். காலங்கள் இப்படி நகர்ந்து கொண்டிருக்க இதோ 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆளாளுக்கு தயாராக துவங்கிவிட்டனர். தம்பிதுரை மீண்டும் கரூரில் தனக்கு சீட் எதிர்பார்க்கிறார், இதை வைத்து கடந்த சில மாதங்களாக அந்த தொகுதியின் கிராமங்களாக சுற்ற துவங்கிவிட்டார். 

இந்நிலையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென மத்திய அரசுக்கு எதிர் நிலைப்பாட்டை கையில் எடுக்க துவங்கிவிட்டார் தம்பி. கடந்த சில நாட்களாக பி.ஜே.பி.யை கடுமையாக கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. கூட்டணியை நோக்கி பி.ஜே.பி. நகர்வதாகவும், ஸ்டாலினுக்கு டெல்லி சில ரகசிய சலுகைகளை செய்து கொடுப்பதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்துதான் போட்டி! என்றெல்லாம் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார் பி.ஜே.பி.யை. 

இந்நிலையில் தொகுதிக்குள் அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் வலுக்க துவங்கிவிட்டன. ‘நாலரை வருஷமா எங்கே போனீங்க? குளிக்கவும், கழுகவும் தண்ணீரில்லை ஆனால் நீங்க ஃப்ளைட்டுல பறந்துட்டு இருக்கீங்க!’ என்று மக்கள் போட்டுப் பொளக்க துவங்கிவிட்டனர். விளைவு, இப்போது அரசியல் ரீதியில் மட்டுமில்லாமல் நிர்வாக ரீதியிலும் பி.ஜே.பி.யை திட்ட துவங்கியிருக்கிறார் தம்பிதுரை. கரூரில் “மத்திய அரசின் கையில்தான் முழு அதிகாரமும் உள்ளது. இதை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை ஏதோ முனிசிபாலிட்டி ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்கள். 

ஜெயலலிதா இருந்தபோது தமிழக வளர்ச்சிக்காக பதினெட்டாயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டார். ஆனால் அதில் ஒரு பைசா கூட இதுவரையில் தரவில்லை. தூய்மை இந்தியான்னு சொல்லிட்டு வெறும்  துடைப்ப கட்டையை வெச்சுக்கிட்டு நின்னு என்ன பண்ண? மத்திய அரசு நிதி தராமல் எம்.பி.தொகுதிக்குள் என்ன பண்ணுவது?” முழுக்க முழுக்க மோடி அரசை குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறார் தம்பிதுரை. 

தம்பியின் இந்த போக்குக்கு டெல்லியில் கடும் எரிச்சல். மேலேயிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத்தான்  கேள்வி கேட்கிறார்களாம் ‘அவருக்கு என்னதான் பிரச்னை?’ என்று. எடப்பாடியார் இதுபற்றி தம்பிதுரையிடம் கேட்டபோது ‘மக்கள் என்னை கேள்வி கேட்கிறப்ப உண்மையை சொல்ல வேண்டியிருக்குது இல்லையா?’என்கிறாராம். சீனியர் மோஸ்ட் மனிதரென்பதால் எடப்பாடியாரால் ஓரளவை தாண்டி தம்பிதுரையை கண்டிக்கவும் முடியலையாம். 

ஆனால் தம்பிதுரை கொடுக்கும் டார்ச்சரால்  மத்திய அரசு தரப்பு பாய்வதென்னவோ தமிழகத்தின் இரு முதல்வர்கள் மீதுதான். ‘அவரென்ன தினகரனுக்கு சப்போர்ட்டா செயல்படுறாரா?’ என்று ஓப்பனாகவே கோட்டை உயர் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டார் டெல்லியில் பணியாற்றும் தமிழக அதிகாரி ஒருவர். தம்பிதுரையின் சீற்றத்துக்கு பின்னால் திரைமறைவில் யாராவது இருக்கிறார்களா? அது யார்? என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது கோட்டை வட்டாரம்.

click me!