
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என்பது குறித்து சசிகலா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவராக மீரா குமாரை வேட்பாளராக தேர்ந்தெடுத்தது. குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், மக்களவை துணை சபாநாயக்ர தம்பிதுரை, டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக வேட்பாளர் ராம்நாத்தை ஆதரிப்பது என்பது சசிகலா, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு என்று கூறினார்.
குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, முதலமைச்சர் ஆதரவு அதிமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் சசிகலாவை உள்ளடக்கியதுதான் அதிமுக தலைமை என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் பிளவு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவில் பிளவு இல்லை என்றும் கருத்து வேறுபாடு மட்டுமே இருக்கிறது என்றும் கூறினார்.