தைப்பூசத்தில் தலைதூக்கிய ‘தல’ அரசியல்! எல்லாம் முடிந்தபின் தரமா ஒரு சம்பவம் செய்ய வந்திருக்கும் அஜித்!

By Vishnu PriyaFirst Published Jan 21, 2019, 9:49 PM IST
Highlights

தல ரசிகர்களின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ’அறிக்கையில் அடிச்சு தூக்கியிருக்கிறார் அண்ணன்’! ஆம் தன்னையும், தன் சினிமாவையும், தன் ரசிகர்களையும் அரசியலுடன் முடிச்சுப் போட்டு பேசி வரும் சில வாய்களுக்கு, கெத்தாக கனத்த பூட்டு ஒன்றை இன்று போட்டிருக்கிறார் அஜித்.  அதன் ஹைலைட் பாயிண்டுகளாக நாம் கவனிக்க வேண்டியவை...

*    நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் தீர்மானமானவன். 

*    என் ரசிகர் இயக்கங்களை நான் கலைக்கவும் இந்த காரணமே பின்னணி. 

*    இந்த நேரத்தில் நான் தெளிவாக சொல்ல விரும்புவது, எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஆசை இல்லை.

*    நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. 

*    சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களை , விமர்சகர்களை தரமற்ற முறையில் வசைபாடுவதை நான் என்றும் ஆதரிப்பதில்லை. 

*    என் ரசிகர்கள் படிப்பு, பணி, சட்ட ஒழுங்கு, ஆரோக்கியத்தின் மேல் கவனம் வைக்க வேண்டும். 

*    வாழு! வாழவிடு! ....என்பவையே. 

இந்த அறிக்கையின் மூலம் ரஜினிகாந்த் உள்ளிட்ட சக போட்டி நடிகர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், போட்டி நடிகர்களின் ரசிகர்கள் இவர்களையெல்லாம் தாண்டி தன் ரசிகர்கள் ஆகியோருக்கு அழுத்தமான தனது ‘அரசியல் ஆசை எனக்கில்லை’ எனும் கருத்தை தெரிவித்துவிட்டார்தான் அஜித். 

ஆக இதை இப்படியே விட்டுவிட்டு அப்படியே கிளம்பிவிடலாமா? என்று கேட்டால், ’இல்லை! அஜித் அழகாய் தன் அரசியலை துவங்கியிருக்கிறார். அதுவும் இன்று தைப்பூசம், வேலனுக்கு பிடித்த நாளில், தன் வேலையை துவக்கியிருக்கிறார் தல.’ என்கிறார்கள். 
ஆச்சரியத்துடன் அவர்களிடம் விபரம் கேட்டால்...”அஜித் இன்றைக்கு விடுத்திருக்கும் அறிக்கைக்கான தேவையும், அவசியமும், அவசரமும் எப்போவோ எழுந்துவிட்டது. 

விஸ்வாசத்தோடு பேட்ட படமும் பொங்கலுக்கு மோதப்போகிறது! எனும் முடிவு எழுந்த நாளில் இருந்தே இரு தரப்பு ரசிகர்களும் மிக மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டிருந்தார்கள் சமூக ஊடகங்களில். இரு தரப்பு தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டு தங்கள் படத்தை எதிர் படத்துடன் மோத விட்டார்கள், படம் ரிலீஸான நாளில் மிகக் கடுமையான மோதல்கள் ரசிகர்களுக்குள் நடந்து கத்தி குத்து, கட் அவுட் உடைந்து உயிர்பலி வரைக்கும் போனது. அப்போதெல்லாம் வாயே திறக்கவில்லை அஜித். 

சினிமா தாண்டி, தலயை அரசியலோடும் முடிச்சுப் போட்டு பேச துவங்கினார்கள். ’அம்மா காலத்தில் இருந்தே அதிமுக.வின் செல்லப்பிள்ளை அஜித்! விஜய் எப்போதும் அதிமுக வோடு மோதுவார், அதனால் அஜித்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.’  என்று ஒரு குரூப் கூர் தீட்டியது. மற்றொரு குரூப்போ, ’தங்களுக்கு ஒத்துவராத ரஜினிகாந்தை கழட்டிவிட்டு, அவரை விட அதிக மக்கள் செல்வாக்கு இருக்கும் அஜித்தை பிஜேபி வளைக்க முயற்சிக்கிறது.’ என்று பட்டை தீட்டியது. 

இந்த பேச்சும் எழுந்து கணிசமான நாட்களாகிவிட்டது. ஆனால் அப்போதும் வாய் திறக்காத அஜித் இப்போது அறிக்கையை தட்டிவிட்டிருக்கிறார். 

காரணம்?....கடந்த 10-ம் தேதி ரிலீஸான விஸ்வாசம் ரசிகர்களின் மோதல்கள், ஊடகங்களின் பில்ட் -அப், அரசியல் சர்ச்சை ஆகியவற்றின் புண்ணியத்தால் ஓடு ஓடென ஓடி கோடிகளை குவித்துவிட்டது. ஆனால் இன்றிலிருந்து பள்ளி, கல்லூரிகளை நோக்கி மாணவர்களும், வேலையிடங்களை நோக்கி பணியாளர்களும் படையெடுக்க துவங்கிவிட்டனர். 

இனி பொதுவாகவே எல்லா சினிமாவும் டல்லடிக்க துவங்கிவிடும். ஆக வசூல் வேட்டை முடியும் வரை கமுக்கமாக இருந்துவிட்டு, டல்லடிக்க துவங்கிய முதல் நாளில் அதுவும் நல்ல நாளான தைப்பூசத்தை பார்த்து அறிக்கையை தட்டிவிட்டிருக்கிறார் தல. இதுவும் தன் படத்துக்கான ஒருவித ப்ரமோஷன் தான். 

இந்த அறிக்கையின் மூலம், அடாவடியான தன் ரசிகர்களை அஜித் கண்டிக்கவேயில்லை எனும் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வெச்சாச்சு. அதேபோல், அரசியலுக்கு வர முயல்கிறார் அஜித்! எனும் விமர்சனத்துக்கும் புள்ளி வெச்சாச்சு.

ஆனால் அரசியலை பொறுத்தவரையில் ‘இல்லை’ என்பார். ஆனால் ‘உண்டு.’ இது அஜித்துக்கும் தெரியும்தானே?!” என்கிறார்கள். 
நெசமாவா தல!?
 

click me!