திரிபுராவில் ஒடச்சா இங்க சிலை வைப்போம்!! சிலை அரசியலில் இறங்கிய கம்யூனிஸ்ட்கள்...

By Vishnu PriyaFirst Published Jan 21, 2019, 9:17 PM IST
Highlights

விளாதிமிர் இலீச்!-    இளம் மற்றும் நடுத்தர கம்யூனிஸ்டுகள் எத்தனை பேருக்கு இந்தப் பெயரை சொன்னால் யாரென்று விளங்குமோ தெரியாது! ஆனால் ’லெனின்’ எனும் பெயரைச் சொன்னால் உலகமே அதிரும்.

ரஷ்யப் புரட்சியாளர், போல்செவிக் கட்சியின் தலைவர், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபர், லெனினியம் எனும்  பொதுவுடமை சித்தாந்தத்தின் நிறுவனர் என்று பெரும் சாதனைகளையெல்லாம் விட, ‘தோழர்!’ என்று உலக பாட்டாளிகளால் விளிக்கப்படுபவர். 

சர்வதேசத்தில் ரஷ்யாவுக்கு நிகராக லெனினை இந்தியாவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இங்கே கம்யூனிஸ சித்தாந்தமானது அரசியல் ரீதியில் தோற்றாலும் கூட, பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பு ரீதியில் உயிர்ப்புடன் இருக்க முக்கிய காரணம் லெனின் தான். 

அப்பேர்ப்பட்ட லெனினுக்கு இந்தியாவில் புதியதாக ஒரு சிலை நாளை நிறுவப்படுகிறது. எங்கே? கம்யூனிஸ ஆதிக்கம் நிறைந்திருக்கும் கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களிலா! இல்லை...நம்ம திருநவேலியிலண்ணே. அதுவும் நெல்லை சிட்டியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ரெட்டியார்பட்டியில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான ‘ஏ.பி.இல்லம்’ வளாகத்தில் இந்த சிலை நிறுவப்படுகிறது. 
லெனின் சிலை இங்கே ஏன்?...

”திரிபுராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சில மாதங்களுக்கு முன் நடந்தன. ரிசல்ட் வெளியாக துவங்கி, பி.ஜே.பி. முன்னிலைப்பெறுவது வெளியானது. அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதியிலிருந்த லெனின் சிலையை தகர்த்தது ஒரு கும்பல். ’சங்பரிவாரங்களின் கூட்டமே இதை செய்தது’ என்று பெரும் புகார் வெடித்தது. தேசம் முழுவதுமே அதிர்வு பற்றிக் கொண்டது. 

இந்தியாவெங்கிலும் ஆர்பாட்டம் நடந்தது போல் திருநெல்வேலியிலும் நடந்தது. அப்போது ‘அங்கன ஒடச்சாங்கல்ல, இங்கன நம்மூர்லேயே தோழர் லெனினுக்கு ஒரு சில எழுப்புவோம்லே!’ என்று சில காம்ரேடுகள் பொங்கினர். அந்த ஆவேசம் வெறும் உணர்ச்சியாக கடந்து வடிந்துவிடாமல், இதோ உண்மை சிலையாகவே உருவாகிவிட்டது. 

நாளை இதை அங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி திறந்து வைக்கிறார்.” என்று சிலை உருவான காரணம் பற்றி தகவல் பகிர்ந்தார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள் சிலர். 

லெனின் சிலை ஹைலைட்ஸ்:

*    இந்த சிலையை உருவாக்கியவர் சென்னை அரசு கவின்கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்த்ரு. 

*    கண்ணாடி இழை! எனப்படும் மெட்டீரியலால் உருவாகியிருக்கிறது இந்த சிலை. 

*    12 அடி உயரமும், ஐநூறு கிலோ எடையும் உடையது. 

தமிழகத்தில் கம்யூனிஸ கட்சிகள் இரண்டுமே அரசியல் ரீதியில் பெரும் சரிவை சந்தித்து கிடக்கும் நிலையில், இந்த சிலை நிறுவுதலென்பது அவர்களிடையே ஒரு இனம் புரியாத உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது! என்கிறார்கள். அதேவேளையில் படேலுக்கு சிலை அமைத்த தங்களை கிண்டலடித்த காம்ரேடுகளை, ‘நீங்களும் சிலை அரசியலுக்கு வந்துட்டீங்க தோழரே!’ என்று பதிலுக்கு நக்கலடிக்கிறது பி.ஜே.பி!
எது எப்படியானாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் மிக நெருங்கிய தோழன் ‘லெனின்’. அவரது சிலைக்கு ஒரு ரெட் சல்யூட் அடித்து வரவேற்போம்!

click me!