சர்வதேச சுற்றுலா தளத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கரம்.. 63 கடைகள் சாம்பல்.. 2 கோடி ரூபாய் சேதம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jan 9, 2021, 1:05 PM IST
Highlights

இத்தகவலின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றன. அதற்குள் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென  பரவி அங்கிருந்த 63 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கம பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்குள்ள 63 கடை கள் தீயில் கருகி  நாசமாயின. அதில்  2 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் குளச்சலிலிருந்து தீயணைப்பு வண்டிகள் மற்றும் தீயணைப்பு  வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்த்துவிட்டு இங்கு வந்த ஞாபகார்த்தமாக இங்கிருந்து பொருட்களை வாங்கிச்  செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவகையில் இங்கு பேன்சி கடைகள், பொம்மை கடைகள் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்கள் என கன்னியாகுமரியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட  கடைகள் உள்ளது. இந்நிலையில் திரிவேணி சங்கமம் மற்றும் காந்தி மண்டபம்  பகுதியில் இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் தீப்பற்றி எரிவதாக கன்னியாகுமரி தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.  

இத்தகவலின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றன. அதற்குள் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென  பரவி அங்கிருந்த 63 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் ஹோட்டல்கள், பேன்ஸி கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பொம்மை, சங்கு, துணி போன்ற கடைகள் மற்றும் கடைகளில் உள்ள ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் போராடி தடுத்தனர்.

தீ விபத்து மின்சாரக்கசிவினால் ஏற்பட்டதா? அல்லது எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   தீயில் பொருட்களை பறிகொடுத்த கடை உரிமையாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 
 

click me!