பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட சிறுமியின் நிலை எப்படி இருக்கிறது? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By vinoth kumarFirst Published Jul 24, 2021, 11:31 AM IST
Highlights

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட 5 வயது சிறுமி இசக்கியம்மாள் உடல்நிலை நன்கு தேறி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட 5 வயது சிறுமி இசக்கியம்மாள் உடல்நிலை நன்கு தேறி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிப்பவர் முத்துராமன். கூலித் தொழிலாளி. அவர் மனைவி பிரேமா, பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு தனம் (12), இசக்கியம்மாள் (5) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிறுமி இசக்கியம்மாள் வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை உணவுப் பொருள் என நினைத்து யாரும் இல்லாத நேரத்தில் சாப்பிட்டு விட்டார். சிறுமி பிளீச்சிங் பவுடர் உட்கொண்ட சில வாரங்களுக்குப் பின்னர் அவருக்கு வயிற்றில் வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. குழந்தைக்கு சாதாரண வயிற்றுப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக நினைத்த பெற்றோர் நாட்டு வைத்தியம் செய்து குணப்படுத்த முயன்றுள்ளனர். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது. 

அதனால் சிறுமி இசக்கியம்மாளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உணவுக் குழாய் மற்றும் குடல் பகுதியில் பிரச்னை இருப்பதைக் கண்டுபிடித்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. சிறுமியின் குடல் பகுதியை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது, அவர் விஷத்தன்மையுள்ள பொருளை உட்கொண்டதால் உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதனால் சிறுமியால் உணவு மற்றும் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

அவரது உணவுக் குழாயில் இருந்த மூன்று அடைப்புகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சற்று உடல் நலம் தேறிய நிலையில், சொந்த ஊருக்கு வந்திருக்கிறது அவர் குடும்பம். மீண்டும் சிறுமியால் உணவு சாப்பிட முடியாமல், எடை குறைந்து எலும்பும் தோலுமாய், உடல் மெலிந்து காணப்பட்டாள். இதையடுத்து பல்வேறு கட்ட சிகிச்சைகள் பலனளிக்காததால், அரசு சார்பில் சென்னை கொண்டு செல்லப்பட்டு அரசு சார்பில் சிறப்பு கவனிப்பில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது நன்கு தேறி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட 5 வயது குழந்தை சிறுமி இசக்கியம்மாள் உடல்நிலை தேறி வருகிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை இசக்கியம்மாளுக்கு வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவரது உடல் எடை 2 கிலோ கூடியுள்ளது. உணவுகூட உட்கொள்ள முடியாத நிலையில் எழும்பூர் மருத்துவமனைக்கு 6 கிலோ எடையுடன் வந்த சிறுமியின் எடை 8 கிலோவாக அதிகரித்துள்ளது. ஒரு மாதம் சென்னையில் இருந்து சிகிச்சை எடுக்க வேண்டிய காரணத்தால் என்னுடைய எம்.எல்.ஏ விடுதியில் அவர்களை தங்க கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!