
குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு சாதித்து காட்டினார்.
பின்னர் புதிய கட்சி தொடங்கலாம் என முடிவெடுத்தார். ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பின்னர் பேரவை தொடங்கலாமா என திட்டம் தீட்டுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை டிடிவி தினகரன் தாக்கல் செய்துள்ளார்.
அதில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதனால் நாங்கள் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் எனவும் குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் தங்களது மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.