
சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்டோம் என்பதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட வேண்டாம் என்றும் கட்சியும், ஆட்சியும் விரைவில் எங்களிடம் வந்து சேரும். அப்போது இதே முதலமைச்சர் மீண்டும் சசிகலா காலில் விழ வேண்டிய நேரம் வரும் என்று முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், தமிழகம் எங்கும் மக்களை சந்தித்து வருகிறார். கோவையில், பொதுக்கூட்டம் நடத்த தினகர தரப்பு திட்டமிட்டிருந்ருந்தது. இதற்காக கோவை காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
இது குறித்து முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எங்களுடைய அணியின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. காக்கி சட்டையைப் போட்டுக் கொண்டு அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிப்படை காவல்துறை கைவிடவேண்டும். மீண்டும் காலச்சக்கரம் சுழலும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள
வேண்டும் என்று பேசி உள்ளார்.
சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்டோம் என்பதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட வேண்டாம். கட்சியும், ஆட்சியும் விரைவில் எங்களிடம் வந்து சேரும். அப்போது இதே முதலமைச்சர், மீண்டும் சசிகலா காலில் விழ வேண்டிய நேரம் வரும் என்றார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் சந்திக்காதது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, எடப்பாடியையோ,
பன்னீர்செல்வத்தையோ மோடி சந்திக்க விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் தமிழகத்ல் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர் தினகரன்தான் என்பதை மோடி உணர்ந்து விட்டார். தமிழ் மக்களும் அதனை உணர்ந்திருக்கிறார்கள் என்றார்.
டிடிவி தினகரன் பின்னால், மாணவர்களும், இளைஞர்களும் அணி திரண்டு நிற்கிறார்கள் என்றும், அதனை எதிர்கொள்ள இந்த அரசுக்கு தைரியம் இல்லை என்றும், இருந்தால், உள்ளாட்சி தேர்தல் தேதியை உடனே அறிவிக்க சொல்லுங்கள் பார்க்கலாம் என்றும் புகழேந்தி அப்போது கேள்வி எழுப்பினார்.