குடிமகன்கள் கஷ்டத்தை முதல்வரால் தாங்க முடியவில்லை.. டாஸ்மாக் திறப்புக்கு அருமையான விளக்கம் கொடுத்த அமைச்சர்.!

By vinoth kumarFirst Published May 5, 2020, 2:19 PM IST
Highlights

முதலமைச்சர் மனமுவந்து மதுக்கடைகளை திறக்கும் முடிவை எடுக்கவில்லை, குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மனமுவந்து மதுக்கடைகளை திறக்கும் முடிவை எடுக்கவில்லை, குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதால் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

வரும் மே 7ம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், அரசு மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு  அனுமதி கொடுத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நம்மை சுற்றி உள்ள மற்ற மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்த காரணத்தால் நாமும் திறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. மதுவிற்காக மற்ற மாநிலங்களுக்கு அதிக அளவு பொதுமக்கள் செல்வதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரும் மனமுவந்து மதுக்கடை திறக்கும் முடிவை எடுக்கவில்லை. குடிமகன்கள் அவதிபடுகிறார்கள் என்ற அடிப்படையில்தான் மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி 5 நபர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.மேலும், கொரோனா நிவாரண நிதியாக இந்த மாதம் 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலிப்பார். நிதி நிலைக்கு ஏற்ப கொரோனா நிதி வழங்க முடிவு செய்யப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். 

click me!