மனித நேய முதல்வரே, நீங்கள் உதவா விட்டால் யார் உதவுவார்கள்.? ஸ்டாலின் நெஞ்சை பிடித்து உலுக்கிய தமிமுன் அன்சாரி

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2022, 2:18 PM IST
Highlights

10 ஆண்டுகள் 20 ஆண்டுகளென சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை, மாந்த நேயர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளிலாவது விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜன நாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். 

10 ஆண்டுகள் 20 ஆண்டுகளென சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை, மாந்த நேயர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளிலாவது விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜன நாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். மனித நேயம் கொண்ட முதல்வரே, நீங்கள் உதவா விட்டால் யார் உதவுவார்கள் என்றும் அன்சாரி உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

மனிதநேயமிக்க அரசியல் தலைவராக வாழ்ந்து சென்றவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்! 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு' என்று கூறிய பெருந்தகையாளர். அவரது 114 வது பிறந்த நாளையொட்டி, தமிழகமே அவரை நினைவு கூரும் தருணத்தில், அவரது வரலாற்றிலிருந்து ஒரு செய்தியை மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மேலான கவனத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

"மோகன் ரானடே" என்ற போராட்டக்காரரை இந்திய வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஒரு காலத்தில் போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து கோவாவின் சுதந்திரத்துக்காகப் போராடியவர். கோவாவின் விடுதலைக்காக  போராடிய அவரைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்தது போர்ச்சுக்கீசிய அரசு. அவர் போர்க்குற்றவாளியாக ஆயுள் தண்டனையை  அனுபவித்து வந்தார்.

1961-ல் கோவா விடுதலையடைந்து, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்துவிட்டது. ஆனாலும் அவர்  தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள காக்சியா சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார். தமிழக முதல்வராக அண்ணா அவர்கள் பொறுப்பேற்ற  பின்பு, 1968-ல் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின்போது வழியில் உயர்திரு. போப் ஆண்டவரையும் சந்தித்தார் அண்ணா. 

அப்போது அவரிடம் அண்ணா அவர்கள்  முன்வைத்த வேண்டுகோள், “எங்கள் நாட்டின் விடுதலை வீரர் மோகன் ரானடேவை விடுவிக்க, போர்ச்சுக்கல் அரசிடம் நீங்கள் பேச வேண்டும்” என்றார். இரக்கம் நிரம்பிய  உயர்திரு போப் அவர்கள் , “நம்பிக்கையுடன் சென்றுவாருங்கள்” என்றார். போர்ச்சுக்கல் அரசு , விரைவில் மோகன் ரானடேவை விடுவித்தது.

1969-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மோகன் ரானடே, முதலில் சந்திக்க விரும்பியது அண்ணா அவர்களைத்தான். அதற்குள் அண்ணா கொடிய புற்று நோய் காரணமாக மறைந்து விட்டார். சென்னை வந்த மோகன் ரானடே அண்ணா சமாதியில் நன்றி நெகிழ கதறியழுதார். இது உருக்கமான வரலாறு. போப் அவர்களிடம் தனக்கு கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்தில் , தமிழகத்துக்கு தொடர்பில்லாத ஒரு கைதியின் விடுதலைக்காக பேசிய அண்ணாவின்  மனித நேயம் தூய்மையானது.

அந்த அண்ணா வின் மாணவராக அரசியல் பணிகளை செய்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வரிடம் மீண்டும் , மீண்டும் உருக்கமாக கேட்கிறோம். 10 ஆண்டுகளை அல்ல..14 ஆண்டுகளை அல்ல... 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளையாவது , மனிதாபிமானம் மற்றும் பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி அண்ணாவின் பிறந்த நாளையொட்டி முன் விடுதலை செய்யுங்கள்.

நோய்களுடனும், நிம்மதியின்றியும் தவிக்கும் அவர்கள் யாவரும் எஞ்சிய காலங்களில் அவர்களின் குடும்பத்தினருடன்  வாழ வழி செய்யுங்கள். அவர்களின் மரணமாவது குடும்பத்தினரின் கண் முன்னால்  நிகழட்டும் என கதறியழும் உறவுகளின் அழுகுரலை செவியேறுங்கள். அரசியல் சாசன சட்டம் மாநில அரசுக்கு வழங்கியுள்ள 161 வது சட்டப் பிரிவை செயல்படுத்துங்கள்.

உங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதோ, விமர்சிப்பதோ எங்கள் நோக்கமல்ல. உங்களின் தேர்தல் கால வாக்குறுதியைத்தான் நினைவூட்டுகிறோம். மனித நேயம் கொண்ட நீங்கள் இதில் உதவாவிட்டால், வேறு யார் உதவுவார்கள் என்றுதான் கேட்கிறோம். பெரியாரின் முற்போக்கும்,அண்ணாவின் மனிதநேயமும், கலைஞரின் கனிவும் உங்களிடம் இருப்பதாக நம்புகிறோம். இதில் நல்ல முடிவு எடுப்பீர்கள் என எதிர் பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!