உயிரா.? தேர்வா.? என்பதில் அரசு நல்லமுடிவினை எடுக்க வேண்டும்..!! தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published May 26, 2020, 4:32 PM IST
Highlights

ஒட்டுமொத்த மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தேர்வு நடத்திடும் போது,  மாநிலம் முழுவதுமுள்ள கொரோனா பரவல் நிலையினை ஆராய்ந்த பின்னரே தேர்வு  நடத்தவேண்டும். 

கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு,  தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை  வைத்துள்ளது.  இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச்-27 ந் தேதி தொடங்கயிருந்த நிலையில்,  கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரை தேர்வு நடக்குமா, நடக்காதா என  மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. நாளுக்குநாள் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து வருவதே காரணமாகும்.  மார்ச் மாதம் தேர்வு நடைபெற இருந்த காலகட்டத்தில் தமிழத்தில் கொரோனா வெறும் 9 பேரை மட்டுமே தொற்றியிருந்த நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று 17 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் ஜுன்-15 ல் பொதுத்தேர்வு என்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும் தொற்று பரவுவதை குறைக்க முடியுமே தவிர,  முற்றிலுமாக அதை தடுப்பது இயலாது என்பதே நடைமுறை உண்மையாகும். பொதுத்தேர்வினை ரத்துசெய்ய இயலாதபட்சத்தில் தேர்ச்சி விழுக்காடு 25 மதிப்பெண்களாக குறைப்பது,  மொழிப்பாடங்களை ரத்து செய்வது என ஆலோசிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. தேர்வு நடத்தினால் அனைத்து பாடங்களுக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 35க்கும்  குறையாமல் வைப்பதுதான் தேர்வின் உண்மைநிலையை உணர்த்துவதாக இருக்கும். மேலும் கொரோனா நம்மை தொற்றிவிடுமோ என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் , தேர்வு மையத்திற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பதன் மூலம் அது தொற்றிவிடுமோ என்ற பயமும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. 

ஒட்டுமொத்த மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தேர்வு நடத்திடும் போது,  மாநிலம் முழுவதுமுள்ள கொரோனா பரவல் நிலையினை ஆராய்ந்த பின்னரே தேர்வு  நடத்தவேண்டும்.  சென்னையை பொறுத்தவரை 80 % கட்டுபடுத்தப்பட்டப் பகுதிகளாக உள்ளன,  11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் சென்னையில் மட்டும் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்தினால் சென்னையில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாதிப்புக்குள்ளாவார்கள். உயிரா.?  தேர்வா.?  என்பதில் அரசு நல்லமுடிவினை எடுக்கும் என நம்புகிறோம். ஒட்டுமொத்த பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் கொரோனாவை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்த பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த ஆவனசெய்யும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

click me!