
நீதிமன்றம் குறித்து அவதூறாக ஹெச்.ராஜா கைது செய்யப்பட மாட்டார் என்றும், தமிழ்நாட்டை சோமாலியாவாக மாற்றும் திட்டத்தை யாரோ செய்கிறார்கள் என்றும் அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.
இதன் பிறகு, டிடிவி தினகரன் - செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், சிறையில் சசிகலா நன்றாக உள்ளதாக கூறிய அவர், சசிகலா கன்னடமும் இந்தியும் படிப்பதாக வந்த தகவல் தவறு என்றார். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பில் நல்ல முடிவு கிடைக்கும். தூத்துக்குடி சம்பவம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிய காவல் துறை, நீதித்துறைக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கடும் வார்த்தைகளைக் கூறிய பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய மாட்டார்கள் என்றார்.
பதவியை தக்க வைக்கவே அமைச்சர்கள் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என்ற முயற்சியே தேவையில்லாதது. மக்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகள் வேண்டாம். மீத்தேன், நீயூட்ரினோ திட்டம் என தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட்டுவிட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, இருக்கின்ற சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபடலாம் என்றும் தெரிவித்தார்.
சுற்றப்புற சூழல் பாதிக்காத, விவசாய நிலங்கள் பாதிக்காத திட்டங்களைக் கொண்டு வரலாம். நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம், அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி அது தவறு என்று கூறினார்.
பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு, தமிழ்நாட்டை சோமாலியாவாக மாற்றும் திட்டத்தை யாரோ செய்கிறார்கள் என்று அச்சம் தெரிவித்தார். ஒவ்வொரு பொழுதுமே இன்றைக்கு என்ன நடக்கப்போகிறது என்றுதான் தமிழ்நாடே விடிகிறது என்றார். விரைவில் இதற்கொரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று டிடிவி தினகரன் கூறினார்.