காக்காவுக்காக கண்ணீர் வடிக்கும் மோடி காவிரியில் துரோகம் செய்வது ஏன்?: பிரதமரை விமர்சித்து தள்ளும் தமிழகம்.

First Published Mar 26, 2018, 5:16 PM IST
Highlights
tamilnadu opposition to modi


பாரத பிரதமர் மோடியும், தமிழகமும் ஊசி முனை போல்தான் ஒருவருக்கொருவர் மிக ஷார்ப்பாக முறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேசத்தில் அநேக மாநிலங்களில் தனது ஆட்சியை நிறுவிவிட்ட மோடியால் தமிழகத்தை அடக்க முடியவில்லை! மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்துக்கும் துள்ளி எழுந்து எதிர்ப்பை கொட்டுகிறது இந்த மாநிலம். அதேபோல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அரசியல் ரீதியாக தமிழகத்தை ஆட்டித்தான் வைக்கிறார் மோடி. மாநில சுயாட்சி தன்மையை மோடியிடம் இழந்துவிட்டதாகவே வருந்துகிறது தமிழகம்.

சூழ்நிலை இப்படியிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று வானொலியில் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) எனும் பெயரில் மோடி உரையாற்றுவது வழக்கம். அப்படி நேற்று உரையாற்றியவர் ‘இந்திய விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்குநியாயமான விலை கிடைக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.’ ஏன்று ஆரம்பித்து விவசாய வளர்ச்சிக்கான பல விஷயங்களை விளக்கி பெருமிதப்பட்டார்.

அதேபோல் ‘இது கோடை காலம். எனவே ஒவ்வொருவரும் தங்களின் வீட்டின் முன் பாத்திரங்களில் தண்ணீர் வையுங்கள். விலங்குகள், பறவைகளின் தாகம் தணியும். காரணம், கோடையில் அவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்கள் நிறைய இருக்கிறது.’ என்று கூறியிருந்தார்.

பிரதமரின் இந்த பேச்சுக்களை, காவிரி நீர் விவகாரத்தோடு தொடர்பு படுத்தி அரசியல் விமர்சகர்களும்,  எழுத்தர்களும் இணையத்திலும், பொதுவெளியிலும் பொளந்து கட்டி விமர்சிக்கின்றனர்.

“தேசிய விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை பற்றி கவலைப்படும் மோடி, தமிழக விவசாயிகள் டெல்லியில் பல மாதங்கள் போராடியதை ஏன் கண்டுகொள்ளவில்லை?

அம்மணமாய் நின்றும் கூட சந்திக்க மறுத்துவிட்டாரே! உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி பங்கீட்டில் தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலாவது தமிழகத்துக்கு கை கொடுக்கலாம் ! ஆனால் அதையும் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்ட மறுக்கிறார் மோடி.

தமிழகத்தின் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்களின் உயிர் நீரான காவிரியில் முறையான பங்கு அவர்களுக்கு கிடைப்பதில் ஆர்வம் காட்டாத மோடி, காக்காவும் குருவியும் தாகத்தில் வாடும், அவைகளுக்கு வீட்டின் முன் தண்ணீர் வையுங்கள்! என்று கண்ணீர்விடுவது போலிச்செயல்.

காவிரி நீர் வராததால் எத்தனையோ தமிழக விவசாயிகள் தூக்கில் தொங்கி, அந்தப் பிணங்கள் அழுகிய நிலையிலும் கடைக்கண்ணை கூட காட்டாத மோடி, காக்காவின் உயிருக்காக கவலைப்படுவது முதலைக்கண்ணீர்.” என விமர்சித்துக் கொட்டியுள்ளனர்.
தமிழிசை அக்கா, என்ன சொல்லப்போறீங்க?

click me!