முழு அடைப்பு, மறியல், கைது!! பொங்கி எழுந்த எதிர்க்கட்சிகள்.. போர்க்களமான தமிழகம்

First Published Apr 5, 2018, 11:13 AM IST
Highlights
tamilnadu off due to opposition parties protests


காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகமே போர்க்களமாக காட்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மறியல், அடைப்பு, கைது என தமிழகமே போர்க்களமாக காட்சியளிக்கிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் தமிழக விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் உறுதியாக உள்ளனர். காவிரி விவகாரத்தில் வேறுபாட்டை கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்று கூடியுள்ளனர். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்ற வணிகர் சங்கங்கள் இன்று கடைகளை அடைத்துள்ளனர். முழு அடைப்பின் காரணமாக தமிழகமே வெறிச்சோடி காணப்படுகிறது. 

முழு அடைப்பிற்கு சில போக்குவரத்து கழகங்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், ஆளுங்கட்சி தொழிற்சங்க ஊழியர்கள் பணிக்கு சென்றதால் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. 

முழு அடைப்பு மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை, மெரினா சாலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை முடக்கப்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்றவர்கள், மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஸ்டாலினை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மட்டுமின்றி, மதுரை ரயில் நிலையத்தில் புகுந்த எதிர்க்கட்சியினர், ரயில் மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் தடுப்பையும் மீறி ரயில் நிலையத்தில் புகுந்த அவர்கள், ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் முழு அடைப்பு, மறியல், கைது என ரணகளமாக காட்சியளிக்கிறது. 
 

click me!