
கொரோனா பாதிப்பிலிருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த சொத்து வரி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சொத்து வரி உயர்வு
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சொத்து வரி 25 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சொத்து வரி உயர்வு, சொத்துகளின் உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது, வாடகைதாரர்கள், கட்டிடங்களில் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் அனைத்து தரப்பினர் மீதும் இந்த வரி உயர்வு கூடுதல் சுமையாக விழும்.
பொதுமக்கள் பாதிப்பு
ஏற்கெனவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம் போன்றவை விலை உயர்ந்துள்ள காரணத்தால் மக்களின் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவை விலை உயர்ந்துள்ளன. கொரோனா பாதிப்பிலிருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த சொத்து வரி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்திய அரசின் நிர்பந்தனை
மத்திய அரசின் நிர்பந்தத்தால் இந்தச் சொத்து வரி உயர்வு செய்யப்பட்டிருந்தாலும், இந்த வரி உயர்வு தமிழக மக்களுக்கு கூடுதல் சுமையாகும். எனவே தமிழக அரசு, மக்களின் பொருளாதார சிரமத்தைக் கருத்தில் கொண்டு, இந்த சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.