மீண்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கா? 29-ம் தேதி முக்கிய முடிவு எடுக்கிறார் முதல்வர்..!

By vinoth kumarFirst Published Jun 26, 2020, 10:53 AM IST
Highlights

ஜூன் 30ம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, தமிழகம் முழுவதும் ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூன் 30ம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, தமிழகம் முழுவதும் ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30-ம் தேதி வரை 5ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 3,509 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  70,977ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47,650ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.  

இதுவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போவதால் தமிழகத்தில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

click me!