போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... அதிகாலையில் பதறிய கனிமொழி... கண்டுகொள்ளாத திமுக மேலிடம்..!

By Selva KathirFirst Published Jun 26, 2020, 10:17 AM IST
Highlights

போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்ட நிலையில் கனிமொழி பதற்றம் அடைந்ததாகவும் ஆனால் இந்த விவகாரத்தை திமுக மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.

போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்ட நிலையில் கனிமொழி பதற்றம் அடைந்ததாகவும் ஆனால் இந்த விவகாரத்தை திமுக மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கனிமொழி தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில் மர்ம நபர் ஒருவர் தான் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்குள் புகுந்ததாகவும் அப்போது அங்கு வந்த வீட்டுப் பணியாளரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் கனிமொழி இருப்பது கலைஞரின் 2வது வீட்டில். முன்னாள் முதலமைச்சரின் வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்தது எப்படி என்கிற கேள்வி அப்போது எழுந்தது. ஆனால் இந்த வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு கனிமொழி வீட்டில் போலீசின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு நேற்று திடீரென இந்த பாதுகாப்பை போலீசார் வாபஸ் பெற்றனர். அதுவும் வாபஸ் பெறுகிறோம் என்ற அதிகாரப்பூர்வமாக கனிமொழியிடம் போலீஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. காலையில் எழுந்து பார்த்த போது தான் வீட்டில் போலீசார் யாரும் பாதுகாப்பிற்கு இல்லை என்பது கனிமொழிக்கு தெரியவந்துள்ளது. இதனால் சில நிமிடங்கள் அவர் பதறியுள்ளார். ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று அஞ்சியுள்ளார்.

 

உடனடியாக தனது உதவியாளர் மூலமாக தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் ஆட்கள் களம் இறக்கப்பட்டனர். இதற்கிடையே கனிமொழி வீட்டில் பாதுகாப்பு வாபஸ் என்கிற தகவல் வைரலானது. சாத்தான் குளம் போலீசாருக்கு எதிராக கனிமொழி பேசியதால் பாதுகாப்பை வாபஸ் பெற்றுவிட்டனர் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் திடீரென போலீசார் மீண்டும் அங்கு பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் கொரோனா பணிகளுக்கு கூடுதல் போலீசார் தேவை என்பதாலும் கனிமொழி வீட்டில் இருந்த போலீசார் திருப்பி அழைக்கப்பட்டதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே திமுக மேல்மட்ட நிர்வாகிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அந்த கட்சியின் தலைமை உடனடியாக சட்ட நிபுணர்களை நேரில் அனுப்புவது வழக்கம். மேலும் இது போன்ற சமயங்களில் ஸ்டாலினிடம் இருந்து அறிக்கை, கண்டனங்கள் வருவதும் வழக்கமான ஒன்று. ஆனால் இந்த விஷயத்தில் திமுக மேலிடம் கனிமொழியை கண்டுகொள்ளவில்லை. முதல் நாள் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று சாத்தான் குளம் விவகாரம் தொடர்பாக கனிமொழி புகார் அளித்திருந்தார். இது தன்னிச்சையாக கனிமொழி எடுத்த முடிவு என்கிறார்கள். கட்சித் தலைமைக்கு தகவலை மட்டும் தெரிவித்துவிட்டு அனுமதி ஏதும் பெறாமல் கனிமொழி டிஜிபியை சந்தித்ததாக சொல்கிறார்கள்.

இதனால் திமுக மேலிடம் கனிமொழி மீது அதிருப்தியில் இருந்ததாகவும் அதனால் தான் அவர் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட போது திமுக மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் நிலைமையை கனிமொழி திறமையாக எதிர்கொண்டு இந்த விஷயத்தில் ஸ்கோர் செய்துவிட்டார்.

click me!