
காங்கிரஸ் கட்சியில், அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருப்பவர் நடிகை குஷ்பு. மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருப்பவர் நக்மா.
இருவருக்கும் இடையே, பல விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. மத சம்பத்தப்பட்ட விஷயங்களில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில், நடிகை நக்மா கலந்து கொண்ட மகிளா காங்கிரஸ் கூட்டத்தில், குஷ்பு கலந்து கொள்ளாதது பற்றி சர்ச்சையும் எழுந்தது. ஆனால், கட்சியில் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருக்கும் நான், மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று குஷ்பு தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த கூட்டத்தில் பங்கேற்ற நக்மா, குஷ்புவை விமர்சித்ததுடன், அவர், காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக செயல் படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தற்போது சென்னை வந்துள்ள நடிகை நக்மா, நடிகர் ரஜினிகாந்தையும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து பேசி உள்ளார். பாட்ஷா படத்தில் ரஜினியுடன் நடித்ததால் அவரையும், கூட்டணி கட்சி தலைவர் என்கிற முறையில், ஸ்டாலினையும் சந்தித்து பேசியதாக அவர் கூறுகிறார்.
ஆனால், காங்கிரசில் குஷ்புவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை பிடிக்காத, மகிளா ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே, நக்மா சென்னையில் டேரா போட்டு, முக்கியமானவர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் எண்ணமும், நக்மாவுக்கு உள்ளுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட, அவர் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தினார். ஆனால், கடைசி நேரத்தில், அது முடியாமல் போய்விட்டது. எனவே, வரும் காலங்களில் தமிழகத்தில் தமது அரசியலை வலுவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வரும் நக்மா, அதற்கு குஷ்புவே இடையூறாக இருப்பார் என்று கருதுகிறார்.
ஆகவே, இடையூறாக இருக்கும் குஷ்புவை, அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்பதற்காகவே, தற்போது சென்னையில் முகாமிட்டு, முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரசில் நக்மா, குஷ்பு மோதல் உச்சகட்டத்தை அடைந்தால், ஈவிகேஎஸ் இளங்கோவனும், திருநாவுக்கரசரும் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.