மதனுக்கு ஆபத்து வந்தால் பிஜேபி பொறுப்பு அல்ல.. நேரடியாக அடித்த அண்ணாமலை.. சிக்கலில் மதன்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2021, 2:17 PM IST
Highlights

மேலும் இந்த வீடியோ பதிவின் இறுதியில் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஒரு சில நபர்கள் தான் காரணம் என்றும் திரு.மதன் கூறியிருக்கிறார். நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும், கட்சியின்  தலைவருக்கும், அமைப்புச் செயலாளருக்கும் ஆதாரங்களை காட்சிப்படுத்தாமல் தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்,

இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியில் மாநில பொதுச்செயலாளர் திரு.கே.டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் என்னை சந்தித்து பேசியது உண்மை, முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியபோது கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும், குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.ஆகவே அந்த வீடியோ பதிவுகளை என்னிடம் காட்சிப்படுத்தினார். அதன் உண்மை தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன்.

ஆனால் அவர் பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். அடுத்த நாள் மறுபடி என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன் அவர்கள் வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன, அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி மட்டும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல், குற்றம்சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.? ஆகவே மதன் ரவிச்சந்திரன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக ஒரு சுட்டும் பதிவுகளை சமர்ப்பிக்க கூறினேன். 

அதன்பின் மூன்றாவது முறையாக  அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி, எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா.? நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டிருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தான் வீடியோ பதிவுகளை வெளியிடப்போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது, நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது  என்ற முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில், செய்துகொள்ளுங்கள் என்று சுருக்கமாக முடித்து விட்டேன்.

இன்று காலை திரு. கே. டி ராகவன் அவர்களிடம் பேசினேன், 30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்சியின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் எண்ணத்துடன், உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், இதை தான் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கட்சியின் மாண்பையும் செம்மையும் கருதி தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். திரு.கேடி ராகவன் அவர்கள் இந்த பிரச்சினையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

அதே போல திரு. மதன் ரவிச்சந்திரன் சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் இது போல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வெளிவர இருக்கிறது என்று சொல்லி இருப்பது அவருக்கு ஏதேனும் ஒரு உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல பாரம்பரியத்தையும், மரபையும் கட்டிக்காக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். இந்நிலையில் கட்சியின் மாண்பு கருதி இதுபோல குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் திருமதி மலர்கொடி அவர்கள் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து  சாட்டப்படும் குற்றங்களில் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் இந்த வீடியோ பதிவின் இறுதியில் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஒரு சில நபர்கள் தான் காரணம் என்றும் திரு.மதன் கூறியிருக்கிறார். நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும், கட்சியின்  தலைவருக்கும், அமைப்புச் செயலாளருக்கும் ஆதாரங்களை காட்சிப்படுத்தாமல் தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், அவருக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு பாரதிய ஜனதா கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும். அவரவர் செயலுக்கும், அவரவர் நடவடிக்கைக்கும், அவரவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!