
நடிகர் கமல் ஹாசன் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசி வருகிறார் என்று முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.
அண்மையில், நடிகர் கமல் ஹாசன், தமிழத்தில் ஊழல் இருப்பதாக கூறியதை அடுத்து, அவருக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலர் பேசி வருகின்றனர்.
அரசியலுக்கு வந்த பிறகு கமலின் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்றும், அவரெல்லாம் ஒரு ஆளா என்று சில அமைச்சர்கள் ஒருமையில் விளித்தும் வருகின்றனர்.
அதேபோல், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர், தமிழிசை சௌந்திரராஜன், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார்கள் என்று வாரப்பத்திரிகை ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.
ஹெச். ராஜாவும், தமிழிசையும், கமல் அரசியல் பேசுவதையே விமர்சித்து வருகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.வி. சேகர், தமிழிசை கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார்கள். எங்களுக்கு நடிகர்கள் தேவையில்லன்னு சொல்றாங்க. வட இந்தியாவில் சினிமாக்காரர்கள் பாஜகவில் இல்லையா என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சில பேருக்கு எல்லாத்துலயும் ஆர்வம் அதிகம். தினசரி தன்னைப் பற்றி ஏதாவது செய்தி வரணும்னு கேமராவைப் பார்த்த உடனே ஏதாவது பேசிடறாங்க...
இவ்வாறு அந்த இதழில் எஸ்.வி.சேகர். பேட்டியளித்துள்ளார்.