கொரோனாவுக்கு இடையில் கட்சியை வலுப்படுத்த தமிழக பாஜக போட்ட அதிரடி திட்டம்..!! 1170 கூட்டங்கள் நடத்த முடிவு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2020, 3:59 PM IST
Highlights

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் முறை ஆட்சியின் முதலாண்டு சாதனை, கொரோனா தடுப்புப் பணிகள், தற்சார்பு இந்தியா திட்டம் உட்பட தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள பயன்கள் குறித்து மேற்கண்ட கூட்டங்களில் விளக்கி பேசப்பட இருக்கிறது.

தமிழக பா.ஜ.க சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக காணொளி கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :- கொரோனா பாதிப்பின் அளவு தமிழகத்தில் உயர்ந்து கொண்டே செல்வது நமக்கெல்லாம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மிக முக்கியமான பணிகள் தவிர்த்து மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு பக்கம் பாதிப்பு உயர்வது போல், மறுபக்கம் குணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே நம்பிக்கையோடும், எச்சரிக்கையோடும் இருப்போம். கொரோனாவை வெல்வோம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் காணொளிக்கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. 

மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர்கள் திருமதி. நிர்மலா சீதாராமன், திரு. பியூஷ் கோயல், மூத்த தலைவர் திரு. இல.கணேசன், தேசிய செயலாளர் திரு. H.ராஜா, திருமதி. மாளவிகா அவினாஷ் ஆகியோர் பங்கேற்ற காணொளிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்களில் இதுவரை 18 லட்சம் பேர் பங்கேற்று, தலைவர்களின் பேச்சைக் கண்டு, கேட்டுள்ளனர். இவ்வகையில் வருகின்ற 28ந் தேதி, தேசிய பொதுச் செயலாளர் திரு. P.முரளிதர்ராவ் அவர்கள், காணொளிப் பெருங்கூட்டத்தில் சிறப்புரையாற்ற இருக்கிறார். அதேபோன்று, கட்சியின் மகளிர் அணி, இளைஞர் அணி, விவசாய அணி, பிற்பட்டோர் அணி, எஸ்.சி, எஸ்.டி அணி, சிறுபான்மையினர் அணி ஆகியவற்றின் சார்பில், சட்டமன்ற தொகுதி அளவில் காணொளிக் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. 234 தொகுதிகளிலும், 1170 கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. 

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் முறை ஆட்சியின் முதலாண்டு சாதனை, கொரோனா தடுப்புப் பணிகள், தற்சார்பு இந்தியா திட்டம் உட்பட தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள பயன்கள் குறித்து மேற்கண்ட கூட்டங்களில் விளக்கி பேசப்பட இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜ்யசபா உறுப்பினர் திரு.இல.கணேசன், தேசிய செயலாளர் திரு. எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் திரு.C.P.ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் கட்சியின் இதர தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட 180 பேர் மேற்படி கூட்டங்களில் கலந்து கொண்டு, அந்தந்த அணிகளின் சார்பில் உரையாற்ற இருக்கின்றனர். மேற்படி கூட்டங்கள்  அனைத்திலும் பொதுமக்களும், இளைஞர்களும், பெண்களும், அதிகமான அளவில் கலந்துகொள்ளச் செய்யும் விதத்தில், சட்டமன்ற அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று 26ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 2ந் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!