
நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.அப்போது பேசிய அவர், ‘ இந்தியாவில் சனாதன தர்மத்துக்கு எதிராக சிறுபான்மையின மக்கள் போராடி வருகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே இருக்கும்.பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் வெறுப்பு அரசியல் நடத்திக்கொண்டு வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, சமூக நீதிக் கோட்பாடு ஆகியவற்றை ஆதரித்து வருகிறது.
தந்தை பெரியாரும் அம்பேத்கரும் வகுத்து தந்த வழியில்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு சட்டங்களை இயற்றி வருகிறது. பாரதிய ஜனதா அரசு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியிருக்கிறது. இது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு முன்னோட்டம்தான்.
தமிழகத்தில் அதிமுகவும், கர்நாடகா உள்பட வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியும் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதை யாரும் மறந்துவிடவில்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் குரலாகத்தான் அதிமுக திகழ்கிறது. எனவே, தமிழக மக்கள் அதிமுகவையும் பாரதிய ஜனதா கட்சியையும் ஆதரிக்கவே போவதில்லை.” என்று திருமாவளவன் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ‘தமிழகத்தை பொருத்தவரை சில கட்சிகளுக்கு வேலையே இல்லை. இன்னொரு கட்சியின் சின்னத்தில் நின்று ஜெயித்தால்தான் அந்த கட்சிகளுக்கு வாழ்க்கையே.திமுக என்ற ஒரு கட்டுமரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு கடலுக்குள் இழுத்து சென்று அதை வைத்து தத்தளித்து தப்பி வந்துவிடலாம் என சில கட்சிகள் நினைக்கின்றன. 2024ஆம் ஆண்டு மீண்டும் மோடியின் அலை வரப்போகிறது.
400 எம்பிக்களை வைத்துக் கொண்டு பிரதமராக தான் போகிறார். உத்தரப் பிரதேச தேர்தலுக்கு பிறகு 3ஆவது அணி குறித்த பேச்செல்லாம் இருக்காது. பாஜகவுக்கு எதிராக என்னதான் இவர்கள் பிரச்சாரம் செய்தாலும் கூட தமிழகத்திலிருந்து நிறைய பாஜக எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு கேபினட் அமைச்சர்களாக அமருவார்கள்.
எத்தனை அணி வேண்டுமானாலும் உருவாகட்டும். ஆனால் பாஜக அணிதான் வெல்லும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானது. மக்கள் இரு விஷயங்களை பார்த்துதான் வாக்களிக்க போகிறார்கள். தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தால் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும். இதன் மூலம் தமிழகம் அடுத்த நிலைக்கு செல்ல போகிறது. இதைத் தான் பிரச்சாரத்தில் பயன்படுத்த போகிறோம்’ என்று கூறினார்.