
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியசம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், அதிமுக, பாஜக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழகர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளது. ஆளுங்கட்சியான திமுக மட்டும் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடுகிறது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்து கட்சியின் தலைவர்கள் பரப்புரையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் தியாகராயநகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாஜக தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.