மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது.. இது ஒரு பெண்ணின் சபதம்.. திமுகவுக்கு எதிராக தமிழிசை ஆவேசம்!

By vinoth kumar  |  First Published Dec 27, 2023, 11:01 AM IST

தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு...  திண்டாடும் மாடலை வைத்து.... திண்டாடிக் கொண்டிருப்பவர்கள், என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


தூத்துக்குடி மக்களின் குரலாய் பேசியதற்கு தனிப்பட்ட முறையில் என்னை காயப்படுத்துகின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் வரலாறு காணாத வகையில் மழை பெய்து கடும் சேதத்தை விளைவித்து சென்றது. இதுதொடர்பாக நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தென் மாவட்டங்களை தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. வெள்ளத்தை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது என கடுமையா விமர்சனம் செய்திருந்தார். 

Tap to resize

Latest Videos

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர்களுடைய எதிர்கால திட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதுதான். நிச்சயமாக எங்கு போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழகம் மக்கள் அவருக்கு தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள் என்றார். 

இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன் என்னை வேலை செய்ய சொல்வதற்கு அமைச்சர் சேகர் பாபுவுக்கு எந்த உரிமையும் இல்லை. அவரவர் வேலையை சரியாக பார்த்தால் நான் ஏன் என்னுடைய வேலையை விட்டுவிட்டு தமிழகம் வரப்போகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவே சென்றேன். நான் ஏற்கனவே அங்கு போட்டியிட்டிருக்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களை சந்திக்க போனேன் என்றார். 

மேலும் பாஜக செய்தித் தொடர்பாளர் போல பேசுகிறேன் என அவர் கூறுகிறார். என்னைப் பொறுத்தவரை மக்களின் செய்தித் தொடர்பாளராக நான் பேசுகிறேன். ஏனெனில் அந்த அளவுக்கு தென் மாவட்டங்களில் பாதிப்பு உள்ளது என்றார். இதற்கு பதில் அளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக அரசை விமர்சிக்கும் அருகதை ஆளுநர் தமிழிசைக்கு இல்லை. தான் சார்ந்துள்ள இயக்கம் புயல் பாதிப்புக்கு என்ன செய்தது என்பதை தமிழிசை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார். 

இதுதொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு...  திண்டாடும் மாடலை வைத்து.... திண்டாடிக் கொண்டிருப்பவர்கள், என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது...சரியப்போகிறது... இது சபதம்!

தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு...
திண்டாடும் மாடலை வைத்து....
திண்டாடிக் கொண்டிருப்பவர்கள்,என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்...
அவர்களின் மக்கள்…

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv)

அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள்... ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். (தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் அங்கு பார்ப்பேன்....எவ்வளவு வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் காயப்படுத்துங்கள். சமூகத்திலும் காயப்படுத்துங்கள்.....  அந்த ரத்தத்தில் தோய்த்து.... நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்..... இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம் என தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக கூறியுள்ளார். 
 

click me!