
ஓட்டல்களில் ஜி.எஸ்.டி. விலை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சென்னை, தி.நகர் பாண்டிபஜார் உணவகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு செய்தார்.
23-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் எடுக்கப்பட்ட வரி மாற்று முடிவுகளின்படி ஓட்டல்களில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட பில் தொகை மாற்றப்பட்ட ஜி.எஸ்.டி. வரிப்படி சில ஓட்டல்கள் 15 ஆம் தேதி முதல் பில் தொகையை குறைக்க ஆரம்பித்துவிட்டன.
சில ஓட்டல்களில் ஜி.எஸ்டி. 18 சதவீதமாக இருந்தபோது இருந்த விலையிலேயே உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில் இன்று காலை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள பாலாஜி பவன் ஓட்டலுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்று ஆய்வு நடத்தினார்.
ஓட்டலுக்கு சென்ற தமிழிசை, 2 இட்லி, ஒரு வடை வாங்கி சாப்பிட்டு விட்டு, பில் தொகையை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டல்களும், ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், நடிகர் கமல் ஹாசனின் டுவிட்டர் பதிவுகளை புரிந்து கொள்ள கோனார் தமிழ் உரை தேவை என்றும் கூறினார்.