
சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள், நிறுவனங்களிலும் வருமான வரித்துறை நவம்பர் 9 முதல் 6 நாட்களுக்கு அதிரடி சோதனை நடத்தியது. அந்த சோதனையின் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
சசிகலாவின் நிலை குறித்த தனது வருத்தத்தைப் பதிவு செய்த அவரது சகோதரர் திவாகரன், 33 ஆண்டுகளாக சசிகலாவை ஜெயலலிதா பயன்படுத்திவிட்டு அவருக்கு எந்தவித பாதுகாப்பையும் செய்துகொடுக்காமல் தன்னந்தனியாக நிராயுதபாணியாக விட்டு சென்றுவிட்டார் என குற்றம்சாட்டினார்.
சொத்து குவிப்பு வழக்கு உட்பட பல வழக்குகளில் முதல்பெயராக ஜெயலலிதாவின் பெயரே உள்ளதாகவும் அவருடன் இருந்ததால்தான் சசிகலா மற்றும் தன்னுடைய பெயரும் இணைந்ததாகவும் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சொத்து குவிப்பு வழக்கில் முதல் பெயராக ஜெயலலிதா பெயர் உள்ளது என கூறிய தினகரனின் நாக்கு நயவஞ்சக நாக்கு. சசிகலாவை பயன்படுத்திவிட்டு நிராயுதபாணியாக விட்டு சென்றுவிட்டார் ஜெயலலிதா என திவாகரன் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது.
சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவமே சசிகலாவின் குடும்பம்தான். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கின்றனர் சசிகலா குடும்பத்தினர். கடந்த 2, 3 நாட்களாக தினகரனும் திவாகரனும் அத்துமீறி பேசி வருகின்றனர். தமிழ்நாட்டையே சசிகலா குடும்பத்தினர் சூறையாடியுள்ளனர். அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.