ஆளுநர்னா.. அசைவத்துக்கு கூட தடை போடலாமா..?

First Published Nov 20, 2017, 1:00 PM IST
Highlights
non veg ban inside raj bhavan


ஆளுநர் மாளிகைக்குள் அசைவம் சாப்பிட ஆளுநர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடந்ததற்குப் பிறகு, ஓராண்டுக்கும் மேலாக தற்காலிக ஆளுநராக வித்யாசாகர் ராவ் செயல்பட்டார். அந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட அசாதாரண சூழலை ஆளுநர் சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. வித்யாசாகர் ராவ் மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

நீண்ட இழுபறிக்குப் பிறகு தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இவராவது நடுநிலையோடு சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்தன.

ஆனால், கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை செய்ததும் கோவையில் சுகாதாரப்பணிகளை ஆய்வு செய்ததும் பெரும் சர்ச்சையையும் ஆளுநர் மீதான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. அதிகாரத்தை மீறி மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றன. ஆனால், ஆட்சியாளர்களோ ஆளுநரின் நடவடிக்கைகளை வரவேற்பதாக கருத்து தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாத ஆளுநர் பன்வாரிலால், மாவட்டந்தோறும் செல்ல உள்ளதாக அதிரடியாக தெரிவித்தார். ஆளுநரின் இந்த கருத்தும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதற்கே எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், ஆளுநர் மாளிகைக்குள் அசைவம் சாப்பிடக்கூடாது என்ற ஆளுநரின் அடுத்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை உள்ளது. ஆளுநர் மாளிகைக்குள் அசைவம் சாப்பிடக்கூடாது எனவும் அசைவம் சாப்பிட விரும்புவோர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சென்று சாப்பிடலாம் எனவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அசைவ விரும்பிகள் அதிருப்தியில் உள்ளனர். உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆளுநர் மாளிகைக்குள் அசைவம் உண்ணக்கூடாது என்ற உத்தரவு உரிமையை பறிக்கும் செயல் என்ற எதிர்ப்புக் குரலும் எழுந்துள்ளது.
 

click me!