
தம்பிதுரை சொன்ன கருத்து மற்ற தேசியக் கட்சிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் நிச்சயம் பாஜகவுக்கு அது பொருந்தாது. அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை மத்திய பாஜக அரசு பின்னின்று இயக்கி வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், அதிமுக - பாஜக இடையிலான நெருக்கம் சமீபகாலமாக குறைந்துவருவதாகத் தகவல் வெளியாகியது.
தேசியக் கட்சிகள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியாத நிலையில்தான் தேசியக் கட்சிகள் உள்ளன. அவர்களால் முடிந்ததெல்லாம் நோட்டாவுடன் போட்டியிட மட்டுமே முடியும் என்றார் தம்பித்துரை.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நோட்டாவை விட மிகக் குறைந்த வாக்குகளை பாஜக பெற்று கேலிக்கூத்தானதை அனைவரும் அறிவோம்.
இதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வரும் நிலையில், நேற்று இதை சுட்டிக்காட்டி பேசி கலாய்த்தார்.
இதற்கு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை தம்பிதுரையின் இந்த கருத்துக்கு பதிலளித்தார், "மற்ற தேசியக் கட்சிகளுக்கு வேண்டுமானால் தம்பிதுரை சொன்ன கருத்து பொருந்தும். ஆனால் நிச்சயமாக பாஜகவுக்கு அது பொருந்தாது. நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றோம் என்று கூறுகின்றார்.
ஆனால் ஆளுங்கட்சி அங்கு வாங்கிய ஓட்டு எவ்வளவு என்பதை தம்பிதுரை எண்ணிப் பார்க்க வேண்டும்" என்ற தமிழிசை, ஆர்.கே.நகரில் நோட்டாவுக்கும், நோட்டுக்கும்தான் போட்டி நடந்தது. அவர் நோட்டாவைப் பற்றிப் பேசுகிறார். நாங்கள் ஆர்.கே.நகரில் நோட்டு விநியோகித்ததைப் பற்றிப் பேசுகிறோம்" என்று கூறியுள்ளார்.