பா.ஜ.கவின் வளர்ச்சியை வெளியே கொண்டுவராத அளவுக்கு தமிழக அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள் - தமிழிசை காட்டம்...

First Published Feb 28, 2018, 10:13 AM IST
Highlights
Tamil politicians blocking the growth of BJP - tamilisai


கோயம்புத்தூர்

பா.ஜனதாவின் வளர்ச்சியை வெளியே கொண்டு வராத அளவுக்கு தமிழக அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள் என்று கோவையில் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

கோயம்புத்தூரில் நடைபெறும் கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா மாநிலத் தலைவர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், "தமிழகத்துக்கு பா.ஜனதா தொடர்ந்து பல நல்ல திட்டங்களை செய்து வருகிறது.

மத்திய மந்திரி நிதின் கட்காரி தமிழகத்துக்கான பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். அவரின் வருகையை, வேண்டும் என்றே ஒரு பாடல் பிரச்சனையை வைத்து முற்றிலும் பா.ஜனதாவின் வளர்ச்சியை வெளியே கொண்டு வராத அளவுக்கு தமிழக அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள்.

ஐ.ஐ.டி. நிறுவனம் ஏன் விநாயகர் பாடலை பாடினோம்? என்ற விளக்கத்தை  கூறியிருக்கிறார்கள். அங்கு படிக்கும் மாணவ - மாணவிகளின் விருப்பத்தின்படிதான் அந்த பாடல் பாடப்பட்டுள்ளது. உடனே மத்திய அரசின் சதி என்றும், மத்திய அரசு சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்து வருகிறது என்றும் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்காகவே மத்திய மந்திரிகள் வந்ததுபோன்ற ஒரு தோற்றத்தை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்து இல்லை. ஆனால், அங்கு இறைவணக்கம் பாடியது ஏதோ உள்நோக்கம் கொண்டது என்றும், மத்திய மந்திரிகள் அதை பாடச் சொன்னது போன்றும் கூறுவது சரியில்லை.

தற்போது தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் மொழியை வைத்து மீண்டும் அரசியல் செய்வதை இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள்.

வட இந்தியாவுக்கு படிப்பதற்காக போகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதை நாம் கண்காணிக்க வேண்டும்.

எல்லா நல்ல திட்டங்களையும், பாதுகாக்கப்பட வேண்டியதையும் விட்டுவிட்டு, வெறும் உணர்வு பூர்வமான மொழி அரசியலை மறுபடியும் கொண்டுவந்து அரசியல் களத்தை களங்கடிப்பது நல்லது அல்ல.

முந்தைய காங்கிரசு அரசைவிட பா.ஜனதா தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளது. தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் வராதவாறுதான் மத்திய அரசு நடந்து கொள்ளும்.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும். காவிரியில் 37 கிளை நதிகள் உள்ளன. அந்த நதிகளில் வீணாக செல்லும் தண்ணீரை தேக்க நாம் ஏன் அணை கட்டவில்லை?

காவிரியில் இருந்து நமக்கு 177.25 டி.எம்.சி.யும், கோதாவரியில் இருந்து 130 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எல்லா கோரிக்கைகளுக்கும் பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று இல்லை. எந்த கோரிக்கை வைத்தாலும் பிரதமர், மந்திரிகளிடம் கலந்து ஆலோசித்த பின்னர்தான் சொல்ல முடியும். காவிரி நதிநீர் நீண்ட கால பிரச்சனை. இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் அதை செய்யவில்லை.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆனால், அவர்கள் ஆட்சி செய்தபோதுதான் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

இந்தியாவில் தொழில் தொடங்குவதில் முதலீடுகளை பெற்று இருப்பதில் தமிழகத்தில் ஒரு சதவீதம்தான் என்ற தகவல் கிடைத்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதே அதற்கு காரணம். எனவே, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

 

click me!